;
Athirady Tamil News

13 ஆண்டுகளுக்கு முன் மாயமான 2 வயது மகள்! AI மூலம் 14 வயது புகைப்படத்தை பகிர்ந்து தேடும் பாசப் போராட்டம்

0

13 ஆண்டுக்கு முன்பு 2 வயதில் காணாமல் போன குழந்தையை AI உதவியுடன் சென்னை பொலிஸார் தேடி வருகின்றனர்.

மாயமான 2 வயது மகள்
சென்னை சாலிகிராமத்தில் உள்ள மஜித் நகர் வலம்புரி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (50).

இவருடைய 2 வயது மகள் கவிதா கடந்த 2011 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது மாயமாகியுள்ளார்.

பின்னர், தனது மகளை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் அதே தினத்தில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, பொலிஸார் ‘காணவில்லை’ என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சென்னை காவல் ஆணையராக இருந்த திரிபாதி, தனிப்படைகளை அமைத்து தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்று சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் வசம் சென்றது. ஆனாலும், கவிதா கிடைக்கவில்லை. இதையடுத்து சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை என நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்கை முடித்து வைத்தனர்.

ஆனாலும், 13 ஆண்டுகளாக தனது மகளை தேடும் பெற்றோர் காவல்துறையின் கதவுகளை தட்டி வந்தனர். பின்னர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் இந்த வழக்கை எடுத்தனர்.

AI மூலம் தேடல்
தற்போது, 2 வயதில் மாயமான கவிதா புகைப்படத்தை AI தொழில்நுட்பம் மூலம் தற்போது 14 வயதில் எப்படி இருப்பார் என்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கவிதாவின் பழைய புகைப்படம் மற்றும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட புதிய புகைப்படம் ஆகியவற்றை இணைத்து போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், காணாமல் போன சிறுமியின் தகவல் தெரிந்தால் 9444415815, 9498179171 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும், சரியான தகவல் தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

13 ஆண்டுகளாக காணமால் போன மகளை தேடும் தந்தையின் பாசப் போராட்டம் கண்கலங்க வைத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.