அரசாங்கத்திற்கு 1700 கோடி ரூபா இழப்பு: நாடளுமன்றில் பகிரங்கப்படுத்திய எம்.பி
சீனி வரி மோசடியால் அரசாங்கத்திற்கு சுமார் 1700 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலா பிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (22) உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை
அதன்படி, இழந்த வருமானத்தில் இருந்து 50 கோடி ரூபாவை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மீளப் பெற்றுள்ளதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இது தொடர்பான முழுமையான அறிக்கை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
அத்தோடு, குறித்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முக்கியமான தீர்மானம்
இதேவேளை, பொது நிதி முகாமைத்துவ சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் எனவும், சர்வதேச நிதி அமைப்புக்கள் இரண்டு தசாப்தங்களாக முன்வைத்த கோரிக்கைகளுக்கு பதில் வழங்குவதாகவும் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும், பொது நிதி முகாமைத்துவ சட்டமூலத்தை முன்வைத்தமை வரலாற்றுச் சாதனை எனவும், சுதந்திர இலங்கையின் நிதிக் கொள்கை தொடர்பில் அரசாங்கம் எடுத்த மிக முக்கியமான தீர்மானம் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.