பயங்கர ஆயுதம் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியது ரஷ்யா: அது என்ன ஆயுதம்?
ரஷ்யா பயங்கர ஆயுதம் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியுள்ள நிலையில், அது மற்ற சேட்டிலைட்களைக் கொல்லக்கூடிய ஆயுதமாகும் என அமெரிக்காவே எச்சரித்துள்ளது.
பயங்கர ஆயுதத்தை விண்வெளிக்கு அனுப்பிய ரஷ்யா
ரஷ்யா, Cosmos-2576 என்னும் சேட்டிலைகளை அழிக்கக்கூடிய ஆயுதம் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இம்மாதம், அதாவது, மே மாதம் 16ஆம் திகதி, அந்த ஆயுதம் ரக்கெட் ஒன்றின் உதவியுடன் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
விடயம் என்னவென்றால், அது அமெரிக்க உளவு சேட்டிலைட்டான USA 314 பயணிக்கும் அதே வட்டப்பாதையில் பயணிப்பதாக தெரியவந்துள்ள நிலையில், அது தன்னைப்போன்ற பிற சேட்டிலைட்களை தாக்கக்கூடியதாக இருக்கலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அமெரிக்கா எச்சரித்துள்ளதற்கேற்ப, ரஷ்ய விண்வெளி ஏஜன்சியும், ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சகத்தின் திட்டத்தின்கீழ் அந்த ராக்கெட் ஏவப்பட்டதாக தெரிவித்துள்ளது.
ரஷ்யா விண்வெளியில் தாக்குதல் நடத்தக்கூடிய அணு ஆயுதம் ஒன்றை உருவாக்குவதற்கு, அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. அப்படி ஒரு ஆயுதம் ஏவப்பட்டால், அது தனியார் மற்றும் அரசு மொபைல் போன்கள் மற்றும் இன்டர்னெட் சேவைகளை பாதிக்கக்கூடிய மாபெரும் ஆற்றல் அலைகளை உருவாக்கக்கூடும் என்ற அச்சமே அமெரிக்காவின் எதிர்ப்புக்குக் காரணம் ஆகும். என்றாலும், அப்படி ஒரு ரஷ்ய அணு ஆயுதம் விண்வெளியில் இதுவரை ஏவப்படவில்லை என்றே நம்பப்படுகிறது.