சொர்க்கம் என கொண்டாடப்பட்ட தீவு நாட்டில் இருந்து பிரித்தானியர்கள் அவசரமாக வெளியேற்றம்
மிக மோசமான வன்முறை சம்பவங்களை அடுத்து சொர்க்கம் என கொண்டாடப்பட்டு வந்த தீவு நாட்டில் இருந்து பிரித்தானியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
9 நாட்களாக நீடிக்கும் வன்முறை
பிரான்சின் கடல்கடந்த பிராந்தியமான நியூ கலிடோனியா தீவு நாட்டில் கடந்த 9 நாட்களாக நீடிக்கும் பெரும் வன்முறை சம்பவங்களில் இதுவரை 6 பேர்கள் மரணமடைந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
அத்துடன் வாகனங்கள், அங்காடிகள், கட்டிடங்கள் என தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இணைந்து தங்கள் குடிமக்களை வெளியேற்றி வருகின்றனர்.
கடந்த வாரம் பிரான்ஸ் ராணுவம் களமிறங்கியுள்ள நிலையில், தற்போது பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நியூ கலிடோனியா புறப்பட இருக்கிறார். வெளிவரும் புகைப்படங்களில் முக்கிய சாலைகளில் தீக்கிரையான வாகனங்களை நிறுத்தி வழிமறிக்கப்பட்டுள்ளதாகவும்,
இதனால் உள்ளூர் மக்கள் அல்லது சுற்றுலாப்பயணிகள் மருத்துவ உதவியை நாடவோ உணவுக்கோ அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான பூர்வகுடியினரல்லாத குடிமக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குதல் தொடர்பில் திருத்தம் கொண்டுவர பிரான்ஸ் நிர்வாகம் அனுமதி அளித்த நிலையிலேயே ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரம் வெடித்துள்ளது.
பூர்வகுடி மக்களான Kanak சமூகம் தங்களின் வாக்குரிமையை நீர்த்துப்போக செய்யும் திட்டமிது என குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த நிலையில் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை முன்னெடுக்க ஜனாதிபதி மேக்ரான் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
3,200 சுற்றுலாப்பயணிகள்
ஓராண்டு காலமாக நியூ கலிடோனியாவை தங்களின் வீடு என குறிப்பிட்டு வந்த ஒரு குடும்பம் தற்போது தொடர் கலவரங்களால் தங்கள் படகில் அவுஸ்திரேலியாவுக்கே திரும்ப முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
வணிக ரீதியான விமானங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவுதிரேலியா மற்றும் நியூசிலாந்து அரசாங்கம் தங்கள் குடிமக்களை மீட்கும் பொருட்டு விமான சேவையை முன்னெடுக்கின்றனர்.
பாடசாலைகள் மூடப்பட்டு, அங்காடிகள் பல தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. தற்போது 3,200 சுற்றுலாப்பயணிகள் நியூ கலிடோனியாவில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் நிர்வாகத்துடன் இணைந்து பிரித்தானிய அரசாங்கம் தங்கள் குடிமக்களை மீட்டு வருகிறது. முன்னதாக கடந்த வாரம் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு சுமார் 1,000 ராணுவ வீரர்களை நியூ கலிடோனியாவுக்கு பிரான்ஸ் நிர்வாகம் அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.