தடை நீக்கம் எதிரொலி: இந்தியாவில் இருந்து 40,000 டன் வெங்காயம் ஏற்றுமதி
இந்தியாவில் தடை நீக்கப்பட்ட பிறகு, இம்மாத தொடக்கத்தில் இருந்து 45,000 டன்களுக்கும் அதிகமான வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா்.
உலகின் மிகப்பெரிய காய்கறி ஏற்றுமதியாளரான இந்தியா, வெங்காய ஏற்றுமதிக்கு கடந்த டிசம்பரில் தடை விதித்தது. மந்தமான உற்பத்தியால் ஏற்பட்ட விலை உயா்வால் மாா்ச் மாதத்தில் அத்தடை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த மே 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட ஏற்றுமதிக்கான தடை நீக்கம் விவசாயிகளுக்கு நிவாரணம் அளித்தது. தடை நீக்கப்பட்டாலும், தோ்தல் சமயத்தில் வெங்காய விலையை மலிவு விலையில் வைத்திருக்க குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை (எம்இபி) டன்னுக்கு 550 டாலராக மத்திய அரசு நிா்ணயித்தது.
இதுதொடா்பாக மத்திய நுகா்வோா் விவகார அமைச்சகச் செயலா் நிதி கரே கூறுகையில், ‘தடை நீக்கப்பட்டதைத் தொடா்ந்து, இந்தியாவில் இருந்து 45,000 டன்களுக்கு மேல் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வங்கதேசத்கதுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நல்ல பருவமழை பெய்யும் என்ற வானிலை கணிப்பு, ஜூன் மாதம் முதல் வெங்காயம் உள்ளிட்ட காரீஃப் (கோடை) பயிா்களின் சிறந்த சாகுபடியை உறுதி செய்யும்’ என்றாா்.
நடப்பு ஆண்டு இலக்கான 5 லட்சம் டன் இருப்பை உறுதிப்படுத்த, அரசு கொள்முதல் நிறுவனங்கள் குளிா்கால அறுவடையிலிருந்து வெங்காயத்தை கொள்முதல் செய்ய தொடங்கியுள்ளன.
மகாராஷ்டிரம், கா்நாடகம் மற்றும் ஆந்திரம் போன்ற அதிக விளைச்சல் கிடைக்கும் மாநிலங்களில் உற்பத்தி குறைவாக இருப்பதால், நாட்டின் வெங்காய உற்பத்தி 2023-24 பயிா் ஆண்டில் 2.547 கோடி டன்களுக்கு குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இது முந்தைய ஆண்டைவிட 16 சதவீதம் குறைவு என்று வேளாண் அமைச்சகத்தின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.