நட்டத்தில் இயங்கும் பெருந்தோட்ட நிறுவனங்களை மீளப்பெற அரசாங்கம் பரிசீலனை
நட்டத்தில் இயங்குவதாக கூறப்படும் பெருந்தோட்ட நிறுவனங்களை மீளப் பெறுவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து அது தொடர்பில் பரிந்துரைகளை வழங்குவதற்கு குழுவொன்றை நியமிக்கவுள்ளது.
இந்தநிலையில் அரசாங்கத்தினால் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள 22 பெருந்தோட்ட நிறுவனங்களுக்கான சிறந்த வழியை இந்தக் குழு தீர்மானிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.
புதிய உரிமையாளர்கள்
இந்த நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் தினக்கூலியைக் கூட வழங்க முடியாவிட்டால், குத்தகையைக் குறைத்து புதிய உரிமையாளர்களுக்கு வழங்குவது சிறந்தது என்ற அடிப்படையிலேயே அரசாங்கத்தின் நடவடிக்கை அமைந்துள்ளது.
கடந்த மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்(Ranil Wickremesinghe) பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாட்கூலியாக 1700 ரூபாய் அறிவிக்கப்பட்டதோடு, இது இந்த மே மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பெருந்தோட்ட நிறுவனங்கள் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதோடு, புதிய முன்மொழியப்பட்ட குறைந்தபட்ச கொடுப்பனவு நடைமுறைக்கு வரும் திகதியோ அல்லது அத்தகைய கொடுப்பனவின் அளவையோ இதுவரை தாம் தீர்மானிக்கப்படவில்லை என்று பெருந்தோட்ட நிறுவனங்கள் கூறியுள்ளன.