பயங்கர வெடி விபத்து; உடல் சிதறி 8 பேர் பலி – 60 பேர் படுகாயம்!
வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா, தானேவில் டோம்பிவாலி பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ரசாயன தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இதில், ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பாய்லர் வெடித்துச் சிதறியது.
இதன் அதிர்வுகள், 3-4 கிலோ மீட்டருக்கு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அருகில் இருந்த கார் விற்பனையகம் மற்றும் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளது.
கட்டிடங்களில் இருந்த கண்ணாடிகளும், கார் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகளும் உடைந்து சிதறியது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 60 பேர் படுகாயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்பு படையினர், மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், “காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நான் தானே கலெக்டருடன் இது தொடர்பான ஆலோசனை நடத்தினேன்.
தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் என அனைவரும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்” என எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்துஉயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.