இந்தியாவில் கைதான ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்களின் வாக்கு மூலம்: குறிவைக்கப்படும் ஆர்எஸ்எஸ்
ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும், பாரதிய ஜனதாக் கட்சியின் (Bharatiya Janata Party) தலைவர்கள் மற்றும் கட்சியின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பை தாக்குவதற்கு சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் இந்த நான்கு இலங்கையர்களும் கடந்த 20ஆம் திகதி இந்தியாவின் (India) அஹமதாபாத் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இதில் மொஹம்மட் நுஸ்ரத் 38 தடவைகளும் மொஹம்மட் நஃப்ரான் நாற்பது தடவைகளும் இந்தியா சென்று வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
மொஹம்மட் நஃப்ரான் இலங்கையில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவரான பொட்ட நவ்ஃபரின் மகனாவார். அத்தோடு கைது செய்யப்பட்டுள்ள மொஹம்மட் ஃபாரிஸ் மற்றும் மொஹம்மட் ரஸ்டீன் ஆகியோர் இந்தியா சென்றுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்திய தேசிய தௌஹித் ஜமாத் பயங்கரவாத குழுவின் உறுப்பினர்களே இவர்கள் என குறித்த ஊடகம் ஒன்று நேற்று (23) செய்தி வெளியிட்டிருந்தது.
மொஹமட் நுஸ்ரத் இதற்கு முன்னர் தங்கக் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் என குஜராத் மாநில பயங்கரவாத பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக நஃப்ரான் விசாரணையின் போது ஏற்றுக்கொண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மொஹம்மட் ரஷ்டீனுக்கு எதிராக மூன்று போதைப்பொருள் வழக்குகள் இருப்பதாக குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் வழக்குகள்
யூதர்கள், கிறிஸ்தவர்கள், பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர்கள் மற்றும் கட்சியின் தாய் அமைப்பான RSS அமைப்பை குறிவைக்குமாறு தமக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ள நான்கு இலங்கையர்களும் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானில் ஐஎஸ் தலைவராக செயற்படும் அபு என்பவரின் ஆலோசனைக்கு அமைய, இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
நர்மதா கங்கைக்கு அருகிலுள்ள பகுதியொன்றில் இவர்களின் நிழற்படமும் கையடக்கத் தொலைபேசிகளும் கண்டுபிடிக்கப்பட்டதுடன், பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கிகளும் ரவைகளும் இதன்போது மீட்கப்பட்டிருந்தன.
இதற்கு மேலதிகமாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடியும் கைப்பற்றப்பட்டதுடன், தாக்குதலை நடத்திய பின்னர் அந்தக் கொடியை அங்கு ஏற்றுமாறு தமக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டுள்ள நான்கு இலங்கையர்களும் கூறியுள்ளனர்.