இப்ராகிம் ரைசியின் மரணம்: ஈரான் அரசின் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு
ஈரான் அதிபர் பயணித்த உலங்கு வானூர்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி(Ebrahim Raisi) கடந்த 19- ஆம் திகதி அஜர்பைஜான் (Azerbaijan) நாட்டில் அணை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாடு திரும்பியபோது, அஜர்பைஜான்-ஈரான் எல்லை அருகே அவர் பயணித்த உலங்குவானூர்தி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் பயணித்த 8 பேரும் உயிரிழந்ததாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டது.
முதற்கட்ட விசாரணை
இந்த விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையில், ஈரானின் வடமேற்கில் உள்ள மலைப்பகுதிகளில் கடும் பனிமூட்டத்துடன் கூடிய மோசமான வானிலை நிலவியதால், ஈரான் அதிபரின் இவ்விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ஈரான் அதிபரின்உலங்கு வானூர்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும், மலையின் மீது மோதிய உடனேயே தீப்பிடித்து எரிந்ததாகவும் மற்றும் உலங்கு வானூர்தி மீது துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்தகட்ட விசாரணையில் விபத்து தொடர்பான கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்றும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.