குழந்தை இறந்துவிட்டது என நினைத்த பெற்றோர்.., இறுதிச்சடங்கின் போது இருமியதால் அதிர்ச்சி
உயிரிழந்ததாக நினைத்த ஒரு வயது குழந்தை இறுதிச்சடங்கின் போது இருமியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நோயால் பாதித்த குழந்தை
இந்திய மாநிலமான கர்நாடகா, பாகல்கோட் மாவட்டம், இலக்கல் நகரைச் சேர்ந்த தம்பதியினர் பசவராஜ் பஜந்திரி மற்றும் நீலம்மா.
இவர்களுக்கு பிறந்த ஆண் குழந்தை சுவாச நோயால் அவதிப்பட்டு வந்ததுடன் இதயநோய் உள்ளிட்ட பல உறுப்புகள் செயலிழந்தது.
இந்நிலையில், நான்கு நாட்களுக்கு முன்பு பாகல்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை பெற்றோர் அனுமதித்தனர்.
அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் உடல்நிலை மோசமாக இருந்தது. இதனால் குழந்தை உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்தனர்.
பின்னர், மருத்துவமனையில் இருந்து குழந்தையை பெற்றோர் வீட்டிற்கு கொண்டு வந்தனர். அப்போது குழந்தை மயக்கம் அடைந்தவுடன் சுயநினைவை இழந்தது.
இதனால், குழந்தை உயிரிழந்தது என்று பெற்றோர் நினைத்தனர். இதையடுத்து குழந்தை இறந்த செய்தியை உறவினர்களுக்கு தெரிவித்துவிட்டு இறுதிச்சடங்கு செய்வதற்கான வேலையையும் தொடங்கினர்.
ஆனால், அப்போது திடீரென குழந்தை இருமியதால் வீட்டிற்கு வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனை பார்த்த பெற்றோர் ஆனந்த கண்ணீர் விட்டனர்.
இதன்பின்னர், குழந்தையைத் தூக்கிக் கொண்டு தர்காவுக்கு கொண்டு சென்று பிரார்த்தனை செய்தனர். அதனுடன், தனியார் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். தற்போது குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.