;
Athirady Tamil News

ஜனாதிபதியின் வடக்கு – கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் சுமந்திரன் வெளிப்படுத்திய தகவல்

0

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அபிவிருத்தியிலும், மக்களின் அபிவிருத்தியிலும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்காக யாழ். நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டடத் தொகுதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சுமந்திரன் எம்.பி. கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

“யாழ்ப்பாணம் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் இந்தச் சபையில் உரையாற்ற வாய்ப்பளித்தமைக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும் இன்று இங்கு வந்தமைக்குத் தனிப்பட்ட முறையில் ஜனாதிபதிக்கு நன்றி கூறுகின்றேன்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலம் முதல் வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்.

இன்று திறந்து வைக்கப்படும் யாழ். பல்கலைக்கழகத்தின் இந்த மருத்துவ பீடக் கட்டடம் வடக்குக்கு மாத்திரமன்றி நாட்டுக்கும் ஒரு நல்ல முதலீடாகும் எனச் சுட்டிக்காட்டலாம். மேலும் இது எதிர்காலத்தில் இலங்கையில் நிபுணர்களின் புகலிடமாக மாறும் என நான் நம்புகின்றேன்.

ஜனாதிபதி விசேட கவனம்
முன்னதாக இந்தச் சபையில் உரையாற்றியவர்கள் கூறியது போல் யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தியிலும், மக்களின் அபிவிருத்தியிலும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார். 2005 இல் உங்கள் பயணத்துக்கு வடக்கு மக்கள் தடையாக இருந்திருக்கலாம்.

அதை வட பகுதி மக்கள் இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள் என நினைக்கின்றேன். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தை நான் வாழ்த்துகின்றேன்.

இந்த முதலீடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். யாழ். மாவட்டத்துக்கு வருகை தந்த ஜனாதிபதியை அன்புடன் வரவேற்பதுடன், இந்த விஜயத்தின்போது வடக்குக்கு அவர் ஆற்றி வரும் அனைத்துப் பணிகளையும் பாராட்டுகின்றோம்.” – என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.