வெளிநாடொன்றில் பாரிய நிலச்சரிவு : நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பப்புவா நியூ கினியாவின் தனிமைப்படுத்தப்பட்ட எங்க மாகாணத்தில் இந்த பேரனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
பாரிய நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட கிராமங்களை அடைய மருத்துவர்கள் மற்றும் இராணுவ வீரர்களைக் கொண்ட விரைவு மீட்புக் குழு, சென்றுள்ளதாக மனிதாபிமான நிறுவனமான கெயார்(care) தெரிவித்துள்ளது.
எங்காவின் மலைப்பகுதிகளில்
தென்மேற்கு பசிபிக் பகுதியில் உள்ள தீவு நாட்டின் வடக்கே உள்ள எங்காவின் மலைப்பகுதிகளில் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 03:00 மணியளவில் (வியாழன் 17:00 GMT) ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான வீடுகள் புதைந்தன.
இடிபாடுகளுக்குள் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது தெரியவில்லை. 60 வீடுகள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், “தற்போது, இந்த குடும்பங்களில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கணக்கில் வரவில்லை” என்றும் கெயார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டால்
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சுமார் 4,000 பேர் வசித்து வருகின்றனர். “மலையில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டால்” மற்ற கிராமங்களுக்கும் ஆபத்து ஏற்படலாம் என்றும் அது கூறியது.
எங்க மாகாண எம்.பி.யான அமோஸ் அகேம், கார்டியன் செய்திநிறுவனத்திடம், தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், “நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் மற்றும் 1,182 வீடுகள் புதையுண்டன” என்று கூறினார்.
மீட்புப் பணிகள் பாதிப்பு
பாதிக்கப்பட்ட யம்பலி கிராமத்தையும் தலைநகரையும் இணைக்கும் தடைப்பட்ட சாலையால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.