எல்லா வேலைகளையும் அது அழித்துவிடும்! பாரிஸில் பேசிய எலான் மஸ்க்
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் AI தொழில்நுட்பம் வேலைகளை அழித்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Intelligence) தற்போது ஒவ்வொரு துறையில் நுழைந்து வருகிறது. இதனால் எதிர்காலத்தில் வேலை இழப்புகள் அதிகரிக்கும் என்ற அச்சம் ஒருபுறம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் பேசியுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மஸ்க் இதுகுறித்து கருத்து தெரிவித்தார்.
அவர் கூறுகையில், ”AI தொழில்நுட்பத்தால் அனைத்து வேலைகளும் அழிக்கப்படும். ஒரு கட்டத்தில் நம் யாருக்குமே வேலை இருக்காது. ஆனால் அது மோசமான மாற்றம் என்று கூற முடியாது. எதிர்காலத்தில் நீங்கள் வேலை பார்க்க விரும்பினால் மட்டுமே பார்க்கலாம். வேலை என்பது ஒருவித பொழுதுபோக்கு அம்சம் போல் ஆகிவிடும்.
மற்றபடி ரோபோக்கள் எல்லா சேவைகளையும் செய்துவிடும். உங்களுக்குத் தேவையான பொருட்களை அவையே கொண்டுவந்து கொடுக்கும். ஆனால், எதிர்காலத்தில் வேலை இல்லாமல் மனிதர்கள் உணர்வுபூர்வமாக எவ்வாறு தன்னிறைவு பெறுவார்கள் என்ற கேள்வியும் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.