Helmet அணியாத லொறி ஓட்டுநருக்கு ரூ.500 அபராதம்! பொலிஸார் கூறும் காரணம்
தலைக்கவசம் அணியாத டிப்பர் லொறி ஓட்டுநருக்கு ரூ.500 அபராதம் விதித்து பொலிஸார் வழங்கிய ரசீது வைரலாகி வருகிறது.
இந்தியாவில் நாளுக்குநாள் தொடர்ந்து போக்குவரத்து வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதற்காக, போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்க அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் உயிர்காக்கும் வாகனங்களுக்கு வழிவிடாமல் சென்றாலோ, அதிவேகமாக வாகனம் ஒட்டினாலோ, பைக் ரேஸ் செய்தாலோ ரூ.10000 அபராதமும், டூவீலரில் ஹெல்மெட் அணியாவிட்டால் 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் தான், ஹெல்மெட் அணியாத டிப்பர் லாரி ஓட்டுநருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
என்ன நடந்தது?
இந்திய மாநிலமான கர்நாடகா, உத்தர கன்னட மாவட்டம், ஹொன்னவரில் ஹெல்மெட் அணியாத டிப்பர் லாரி ஓட்டுநருக்கு பொலிஸார் ரூ.500 அபராதம் விதித்தனர்.
அவர்கள் வழங்கிய ரசீது தற்போது வைரலாகி வருகிறது. ஹொன்னாவரைச் சேர்ந்த வினுதா வனோத் நாயக்கா என்பவருக்குச் சொந்தமான டிப்பர் லாரியை சந்திரகாந்தா என்ற ஓட்டுநர் ஓட்டி வந்துள்ளார்.
இவர், சீருடை அணியாமல் ஓட்டிவந்ததை பார்த்த பொலிஸார் தடுத்து நிறுத்தினர். ஆனால், அவருக்கு ஹெல்மெட் அணியாததற்கான ரசீது வழங்கப்பட்டு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது, சீருடைக்குப் பதிலாக ஹெல்மெட் என்று தேர்வு செய்யப்பட்டு அபராதம் விதித்ததே குழப்பத்திற்குக் காரணம் என போக்குவரத்து பொலிஸார் கூறியுள்ளனர்.