யாழ் – தொல்புரம் வாள்வெட்டு சம்பவம்: விசாரணையில் வெளியாகியுள்ள தகவல்
யாழ்ப்பாணம்(Jaffna) – தொல்புரம் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தொல்புரம் பகுதியில் கடந்த புதன்கிழமை(22.05.2024) இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் காவல் உத்தியோகத்தர் உள்ளிட்ட இளைஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வாள்வெட்டில் முடிந்தது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த காவல் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொல்புரம் வாள்வெட்டு சம்பவம்
குறித்த பகுதியில் தினமும் 20 க்கு மேற்பட்ட இளைஞர்கள் இரவில் ஒன்று கூடுவதும், அங்கு அவர்கள் மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள் உட்கொண்டு பெரும் கூச்சலிடுவதும் தகாத வார்த்தைகள் பேசுவதும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தொல்புரம் மத்திய ஆலயம் ஒன்றின் முன்னாள் தலைவர் ஒருவரின் மீது ஆலயம் சம்மந்தப்பட்ட முன் விரோதம் காரணமாக அவரது மகன் தொல்புரம், சனசமூக நிலைய வீதியால் சென்றுகொண்டிருந்த போது அவரின் துவிச்சக்கர வண்டியினை பறித்து தாக்கியுள்ளனர்.
அத்துடன், அவரது வீடு சென்று அவரது குடும்பத்தாரையும் தாக்கியுள்ளனர் . இந்த வழக்கு வட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் மேற்குறிப்பிட்ட காவல்துறை அதிகாரி ஆதரவாக இருந்துள்ளார்.
வெளியான பின்னணி
இதன் காரணமாக குறித்த காவல்துறை அதிகாரி தொல்புரம் மத்திய சனசமூக நிலையத்தால் சென்றுவரும் போது முரண்பட்ட இளைஞர்கள் தகாத வார்த்தைகள் பிரயோகிப்பதும் மிரட்டுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
சம்பவத்தினத்தன்று தனது பிறந்த தினத்தினை உறவினருடன் கொண்டாடிய அந்த காவல்துறை அதிகாரி தனது உறவினர் வீட்டிற்கு சென்று வரும் வேளையில் வழிமறித்த இளைஞர்கள் கூட்டம் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, உணர்ச்சிவசப்பட்ட காவல்துறை அதிகாரி வாள் வெட்டு தாக்குதலில் ஈடுப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது. சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரி 8 வருடங்களாக சேவையில் உள்ளதாகவும் எந்த ஒரு குற்றப் பின்னணியிலும் ஈடுபடாதவர் என்றும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும், இவ்வாறு போதைக்கு அடிமைப்பட்ட இளைஞர்களால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றமையினால், இதற்கு பொறுப்பானவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.