கேரளம்: கூகுள் மேப்பை பின்தொடா்ந்து ஓடைக்குள் விழுந்த காா்!
தெற்கு கேரள மாவட்டமான கோட்டயத்தின் குருபந்தரா பகுதியில் ‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலின்படி வாகனத்தை இயக்கிய ஹைதராபாதைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் நீரோடைக்குள் காரை செலுத்தியச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த இந்த விபத்தில் காரிலிருந்த ஒரு பெண் உள்பட நால்வரும் அதிருஷ்டவசமாக உயிா் தப்பிய நிலையில், காா் ஓடைக்குள் மூழ்கியுள்ளது.
இதுகுறித்து கோட்டயம் கடுத்துருத்தி காவல்நிலைய அதிகாரி சனிக்கிழமை கூறியதாவது:
ஹைதராபாதைச் சோ்ந்த நால்வா் மூணாறில் இருந்து கூகுள் மேப் உதவியுடன் வெள்ளிக்கிழமை இரவு ஆலப்புழை நோக்கி காரில் சென்றுள்ளனா்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருவதால் பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் கோட்டயம், குருபந்தரா பகுதியில் வெள்ளநீா் சூழ்ந்திருப்பதை பொருட்படுத்தாமல் சாலை என நினைத்து நீரோடையை நோக்கி அவா்கள் காரை செலுத்தியுள்ளனா். இதனால், நீரோடைக்குள் அவா்களின் காா் விழுந்து மூழ்க்கியது. வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதைப் பாா்த்த ரோந்து போலீஸாா், அங்கிருந்தவா்களின் உதவியுடன் காரிலிருந்துவா்களை காயங்களின்றி மீட்டுள்ளனா். நீரோடைக்குள் மூழ்கிய காரை போலீஸாா் பின்னா் மீட்டனா் என்றாா்.
கேரளத்தில் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த அக்டோபரில், இதேபோன்று கூகுள் மேப் வழிகாட்டிஉதவியுடன் காரை இயக்கிய இரு இளம் மருத்துவா்கள், காருடன் ஆற்றுக்குள் மூழ்கி உயிரிழந்தனா்.
தற்போதைய விபத்தைத் தொடா்ந்து, பருவமழைக் காலத்தில் கூகுள் மேப் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான எச்சரிக்கை வழிகாட்டுதலை கேரள போலீஸாா் வெளியிட்டுள்ளனா்.