மூன்றாம் உலகப்போரைத் துவக்கப்போவது எந்த நாடு? நிபுணர் கருத்து
சீனா, தைவானை மிரட்டும் வகையில் போர்ப்பயிற்சிகளை நடத்திவருகிறது. இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையில் மோதல் நீடிக்கிறது.
உக்ரைன் ரஷ்யப் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. இப்படி உலகின் வலிமையான நாடுகள் முரண்பட்டுக் காணப்படும் நிலையில், மூன்றாம் உலகப்போர் மூளுமானால், அதைத் துவக்கப்போவது எந்த நாடாக இருக்கக்கூடும் என்பது குறித்து நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
சீனா, தைவான்
மூன்றாம் உலகப்போர் துவங்க காரணமாக இருக்கப்போவது சீனாவோ அல்லது தைவானாகவோ இருக்காது அல்ல என கருதுகிறேன் என்கிறார் Portsmouth பல்கலையின் போர் மற்றும் பாதுகாப்பு நிபுணரான பேராசிரியர் மேத்யூ பவல் (Matthew Powell).
ஏனென்றால், உக்ரைன் விவகாரத்தில் நடப்பதை வைத்துப் பார்க்கும்போது, தைவான் மீது மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைக்கும் அமெரிக்கத் தரப்பிலிருந்து பயங்கர பதிலடி வரும் என்பது சீனாவுக்குத் தெரியும், ஆகவே, அப்படி எந்த நடவடிக்கையையும் சீனா எடுக்காது என்கிறார் அவர்.
ரஷ்யா, உக்ரைன்
ரஷ்யா, உக்ரைனைப் பொருத்தவரை, உக்ரைனுக்கு ஆதரவளிப்பதால் மேற்கத்திய நாடுகள் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்போவதாக ரஷ்யா அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறது.
ஆனால், அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் பிறகு என்ன பின்விளைவுகள் ஏற்படும் என்பது ரஷ்யாவுக்கு தெரியும் என்பதால், அது தாக்குதல் நடத்துவது சாத்தியமில்லை எனலாம் என்கிறார் பேராசிரியர் மேத்யூ பவல்.
இஸ்ரேல், காசா
என்னைப் பொருத்தவரை, இஸ்ரேலும் காசாவும் மூன்றாம் உலகப்போரைத் துவக்க காரணமாக அமையக்கூடும் என்று நினைக்கிறேன் என்கிறார் பேராசிரியர் மேத்யூ பவல்.
இஸ்ரேலைப் பொருத்தவரை, அது இந்தப் போர் தன் நாட்டுக்கு வாழ்வா சாவா பிரச்சினை என கருதுகிறது. தனது இருப்பையே அழிக்க முயல்வதை எதிர்த்து இஸ்ரேல் போராடிக்கொண்டிருக்கிறது.
ஆனால், அந்தப் போரால் இஸ்ரேல் நண்பர்களை பெறப்போவதில்லை, மாறாக, தனிமைப்படுத்தப்படத்தான் போகிறது என்பதால், இஸ்ரேல் ரிஸ்க் எடுக்கக்கூடும் என்கிறார் அவர்.
என்றாலும், யாரும் மூன்றாம் உலகப்போரைத் துவக்கவேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டு சண்டையிட்டுக்கொண்டிருக்கவில்லை.
மூன்றாம் உலகப்போர் துவங்குமானால், அது, யாராவது ஒருவர் செய்யும் தவறு, அல்லது எதிராளி எப்படி பதிலடி கொடுக்கப்போகிறார் என்பது தெரியாமல் கொடுக்கும் தவறான பதிலடியின் காரணமாகத்தான் இருக்கும் என்கிறார் பேராசிரியர் மேத்யூ பவல்.
என்றாலும், இவற்றில் எந்த மோதலானாலும், அது காசாவில் நடக்கும் போரானாலும் சரி, எந்தப் போருமே பெரிதாகி, பெரிய நாடுகள் மோதிக்கொள்ளும் அளவுக்குச் செல்லும் என்று தான் கருதவில்லை என்கிறார் அவர்.