;
Athirady Tamil News

வங்கதேச கடற்பகுதியை புரட்டிப் போட்ட ‘ரீமெல்’: 7 பேர் பலி

0

வங்கக் கடலில் உருவான ‘ரீமெல்’ புயல், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கரையைக் கடந்தது. புயல் கரையை கடந்தபோது அடித்த சூறாவளிக் காற்றினால் ஏற்பட்ட விபத்துகளில் 7 பேர் பலியாகினர்.

மணிக்கு 120 கிலோ மீட்டர்வேகத்தில் காற்று வீசியதால், மரங்களும் மின் கம்பங்களும் விழுந்ததில் சுமார் 150 லட்சம் பேர் மின்சாரம் இல்லாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வெள்ள நீர் சூழ்ந்திருப்பதால், நூற்றுக்கணக்கான கிராமங்கள் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கரையைக் கடக்கத் தொடங்கிய ரீமெல், புயலாக வலுவிழந்து திங்கள்கிழமை காலை கரையை கடந்தது. புயல் காரணமாக பல பகுதிகளில் மிக கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.

இந்த ஆண்டின் பருவமழைக் காலத்தில் உருவான முதல் புயலாக ரீமெல் உள்ளது. ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்குப் பருவமழை செப்டம்பர் வரை நீடிப்பது வழக்கம்.

கடந்த மே 25-ஆம் தேதி மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலம் ‘ரீமெல்’ புயலாக வலுவடைந்தது. இது வடக்கு திசையில் நகா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை தீவிர புயலாக”வலுப்பெற்று, வங்கதேசத்தின் கேப்புப்பாராவுக்கு தெற்கு-தென்மேற்கே சுமாா் 260 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகா் தீவுக்கு தெற்கு-தென்கிழக்கே சுமாா் 280 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டது.

இது மேலும் வடக்கு திசையில் நகா்ந்து வங்கதேசத்தில் உள்ள கேப்புப்பாராவுக்கும், மேற்கு வங்கத்தின் சாகா் தீவுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் கரையைக் கடக்கத் தொடங்கியது. அப்போது கடுமையான சூறைக் காற்று வீசியது. அதைத் தொடா்ந்து, நள்ளிரவில் புயல் கரையைக் கடந்தது.

இந்த புயலுக்கு ஓமன் நாடு அளித்த ரீமெல் என பெயரிடப்பட்டது. இதற்கு அராபிய மொழியில் மண் என்று அர்த்தமாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.