ராகுல் மீதான அவதூறு வழக்கு: ஜூன் 7-ல் விசாரணை
அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கின் மீதான விசாரணை ஜூன் 7-ம் தேதி நடைபெறவுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு, பெங்களூருவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது பேசிய ராகுல் காந்தி, பாஜகவின் அப்போதைய தலைவராக பொறுப்பு வகித்த அமித் ஷா குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து, பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா, கடந்த 2018ஆம் ஆண்டு ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சுல்தான்பூரில் உள்ள எம்.பி, எம்எல்ஏ.,க்களுக்கான மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே ராகுல் தரப்பு வழக்கறிஞர் காஷி பிரசாத் சுக்லா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தில் ராகுல் காந்தி மும்முரமாக இருப்பதாகவும், எனவே நீதிமன்றத்தில் ஆஜராவதில் அவகாசம் வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து ராகுல் மீதான விசாரணை ஜூன் 7-ம் தேதி நடைபெறும் என்று நீதிபதி சுபம் வர்மா தெரிவித்துள்ளார். அப்போது மனுதாரரின் வழக்கறிஞர் சந்தோஷ் குமார் பாண்டே, ராகுல் காந்தி நீதிமன்றத்தை விட்டு ஓடுவதாக குற்றஞ்சாட்டினார். முன்னதாக இந்த வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 20ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி அவர் ஜாமீன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.