36,000 கடந்த இறப்பு எண்ணிக்கை… கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 66 பேர்கள்
கடந்த 7 மாதங்களாக நீடிக்கும் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் போரினால் இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 36,000 கடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை 36,050 பேர்கள்
குறித்த தகவலை காஸா சுகாதார அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் தாக்குதலுக்கு 66 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஒட்டு மொத்தமாக இதுவரை 36,050 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 81,026 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகள் இஸ்ரேல் எல்லையில் முன்னெடுத்த திடீர் தாக்குதலை அடுத்தே இஸ்ரேல் போர் பிரகடனம் செய்தது.
தொடர்ந்து 7 மாதங்களாக இஸ்ரேல் ஹமாஸ் படைகளை இலக்கு வைத்து பாலஸ்தீன மக்களை கொன்று வருகிறது. இதனிடையே, ரஃபா பகுதி மீது முன்னெடுக்கப்பட்ட இஸ்ரேல் தாக்குதலில் 23 பெண்கள், சிறார்கள், முதியவர்கள் உட்பட 45 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ரஃபா மீதான தாக்குதல் கொடூரமான சம்பவம் என்று முதல் முறையாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் சர்வதேச அழுத்தத்தை பொருட்படுத்தாமல் ரஃபா மீதான தாக்குதல் தொடரும் என்றே நெதன்யாகு உறுதிபட தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியா கண்டனம்
இதனிடையே ரஃபா மீதான தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் மீதான தாக்குதல் திட்டமிட்ட கொடூரம் என்று எகிப்து சாடியுள்ளது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளின் படுகொலைகள் தொடர்வதாக சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து போர் குற்றங்களில் இஸ்ரேல் ஈடுபட்டு வருவதாக ஜோர்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், துருக்கி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.