அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி.. தாசில்தார் என நாடகமாடிய கார் டிரைவர்! கோயம்புத்தூரில் மோசடி
அரசு வேலை வாங்கித் தருவதற்காக தன்னை தாசில்தார் என்று கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த கார் டிரைவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மோசடி
தமிழக மாவட்டமான கோயம்புத்தூர், பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரிடம், கடந்த 7 -ம் திகதி ஜேசுராஜா என்பவர் அறிமுகமாகி, தான் மதுரையில் சிறப்பு தாசில்தாராக உள்ளதாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்.
அதன்பின்னர், சக்திவேலின் மனைவிக்கு கோவையில் பில் கலெக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி முன்பணமாக ரூ.25 ஆயிரத்தை ஜேசுராஜா வாங்கியுள்ளார்.
அதன்பின்னர், ரூ.2 லட்சத்தை வாங்குவதற்காக சக்திவேல் வீட்டிற்கே ஜேசுராஜா வந்துள்ளார். ஆனால், ஜேசுராஜாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த சக்திவேல் அடையாள அட்டையை கேட்டுள்ளார்.
அதற்கு ஜேசுராஜா, சக்திவேலுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பியுள்ளார். இதுகுறித்து, சக்திவேல் பொலிஸாரிடம் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், சாந்திமேடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த பொலிஸார், காரில் வந்த ஜேசுராஜாவை பிடித்தனர்.
பின்னர் விசாரணையில், ஜேசுராஜா விருதுநகரைச் சேர்ந்தவர் என்றும், தாசில்தாராக ஏமாற்றி பணத்தை வாங்கியுள்ளார் என்பதையும் ஒப்புக்கொண்டார்.
அதுமட்டுமல்லாமல், 2023 -ம் ஆண்டு முகிலன் என்பவரிடம் தாசில்தார் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மற்றும் பிரேம்குமார் என்பவரிடம் ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ.16 லட்சத்து 25 ஆயிரம் ஏமாற்றி உள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, ஜேசுராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொலிஸார் சிறையில் அடைத்தனர்.