;
Athirady Tamil News

கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம்: நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவு

0

கிழக்கு (Eastern) மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்றைய தினம் வழங்கப்படவிருந்த ஆசிரியர் நியமனங்களுக்கு கல்முனை (Kalmunai) மேல் நீதிமன்றம் மறு அறிவித்தல் வரை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேவேளை, இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 5ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதுடன் மறு அறிவித்தல் வரை நியமனம் எதுவும் வழங்கப்பட கூடாதென பிரதிவாதிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்படவிருந்த பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான தெரிவில் பெரும் முறைகேடுகள் இடம்பெற்றிருக்கின்றன என கிழக்கிலங்கை முஸ்லிம் பேரவை தெரிவித்திருந்தது.

திறந்த போட்டிப் பரீட்சை
இதனை தொடர்ந்து, இவற்றை நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் (Senthil Thondaman) மனு ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக குறித்த முஸ்லிம் பேரவையின் செயலாளர் செயிட் ஆஷிப் கருத்து தெரவிக்கையில்,

“கிழக்கு மாகாணத்தில் நிலவும் க.பொ.த உயர்தர பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை கடந்த மார்ச் மாதம் 30ஆம் திகதி நடாத்தப்பட்டிருந்தது.

இப்பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக குறித்த நியமனத்திற்கான நேர்முகப் பரீட்சை கடந்த வாரம் இடம்பெற்ற நிலையில், இதன் மூலம் நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர்ப் பட்டியல் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டிருக்கிறது.

அத்துடன், இம்மாதம் 28ஆம் திகதி செவ்வாய் தொடக்கம் இவர்களுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பரீட்சை பெறுபேறுகள்
எனினும், இத்தெரிவில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றிருக்கின்றன எனவும், இதனால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் கவலையடைந்துள்ளனர்.

இவ்வாறிருக்கையில், குறித்த நேர்முகப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடாமல் நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டோரின் பெயர்ப்பட்டியல் மாத்திரமே வெளியிடபட்டிருக்கிறது.

ஆனால், இவ்வாறானதொரு நிலையில் நியமனம் வழங்கும் முறையானது சட்டத்திற்கு முரணானது” என சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் இவ்விவகாரத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்தமையுடன் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் குறித்த நேர்முகப் பரீட்சையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் குளறுபடிகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.

இதனை தொடர்ந்து, இவற்றை நிவர்த்தி செய்து பாதிக்கப்பட்ட பட்டதாரிகளையும் ஆசிரியர் நியமன பட்டியலில் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஆளுநர் மற்றும் அதிகாரிகளிடம் அவர் கோரியுள்ளார்.

நீதிமன்றின் உத்தரவு
இதற்கிடையில், இவ்விடயத்தை ஒட்டி கிழக்கு மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழுவின் சார்பில் அதன் செயலாளர் ஆ. மன்சூர் நேற்று (27) ‘அனைத்துப் பரீட்சார்த்திகளுக்குமான அறிவித்தல்’ என்ற பெயரில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிவிப்பில், “கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் மேற்குறித்த போட்டிப்பரீட்சையின் தரவு உள்ளீடு செய்யும் கணினி அமைப்பில் ஏற்பட்ட தவறு காரணமாக அந்த போட்டிப் பரீட்சை சம்பந்தமான மேல் நடவடிக்கைகள் தற்காலிக மாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என்பதை பரீட்சார்த்திகள் அனைவருக்கும் தயவுடன் அறியத்தருகிறேன்.

மேலும், இந்த கணினி அமைப்பு மேம்படுத்தப்பட்ட பின்னர் இறுதித் தேர்வு பட்டியல் மற்றும் மொத்த புள்ளிகள் பட்டியல் ஆகியவற்றை கிழக்கு மாகாண இணையத்தளத்தில் வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தயவுடன் அறியத்தருகிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, ஆசிரியர் நியமனத்தில் பல குளறுபடிகள் காணப்படுவதாலும், ஆசிரியர் நியமனத்திற்கான புள்ளிகளில் தவறுகள் மற்றும் மோசடி உள்ளமையை மாகாண நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அதுவரை நியமனம் எதுவும் வழங்கப்பட கூடாதென நீதிமன்றம் ஜூன் 5 வரை இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.