இஸ்ரேலை கைவிடும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்: பாலஸ்தீனத்துக்கு தனிநாடு அங்கீகாரம்
மூன்று நாடுகள் பாலஸ்தீனத்தை முறைப்படி தனிநாடாக அங்கீகரித்துள்ளதைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான பிளவு பெரிதாகிக்கொண்டே செல்வது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
பாலஸ்தீனத்துக்கு தனிநாடு அங்கீகாரம்
ஸ்பெயின், நார்வே மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள், இன்று, அதாவது, 2024, மே மாதம் 28ஆம் திகதி, செவ்வாய்க்கிழமையன்று, பாலஸ்தீனத்தை முறைப்படி தனிநாடாக அங்கீகரித்துள்ளன. ஹமாஸ் தாக்குதலுக்கு இஸ்ரேல் கொடுத்துவரும் பயங்கர பதிலடியைக் குறைக்கும் வகையில், அதற்கு அழுத்தம் கொடுப்பதற்காக இந்த மூன்று ஐரோப்பிய நாடுகளும் இந்த முடிவை எடுத்துள்ளன.
இஸ்ரேல் சாடல்
அந்நாடுகளின் இந்த முடிவை சாடியுள்ள இஸ்ரேல், இந்த முடிவு காசா போர் மீது உடனடியாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறியுள்ளது.
ஸ்பெயின் நாடு, இஸ்ரேல் காசாவின் ரஃபா நகரம் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவருவதைத் தொடர்ந்து, அந்நாட்டின்மீது ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. அயர்லாந்தின் தலைவரான Harris, இஸ்ரேல் மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்து யோசிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், ஸ்பெயின், நார்வே மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள், பாலஸ்தீனத்தை முறைப்படி தனிநாடாக அங்கீகரிப்பது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பால் கோபமடைந்த இஸ்ரேல் அதிகாரிகள், அந்நாடுகளின் தூதர்களை டெல் அவிவ்விலுள்ள வெளியுறவு அமைச்சகத்துக்கு அழைத்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஹமாஸ் இஸ்ரேல் பொதுமக்கள் மீது நடத்திய தாக்குதல்கள் மற்றும் பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்வதைக் காட்டும் வீடியோக்களை அவர்களுக்கு போட்டுக் காண்பித்தது குறிப்பிடத்தக்கது.