யாழில் உணவு பொதிக்குள் மட்டத்தேள் – உணவகத்திற்கு சீல்
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் உணவு பொதிக்குள் மட்டத்தேள் ஒன்று காணப்பட்டதாக , கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் உணவக உரிமையாளருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
குறித்த உணவகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒருவர் மதிய உணவினை வாங்கியுள்ளார். அதனை வீட்டில் கொண்டு சென்று அவிழ்த்து பார்த்த போது மட்டத்தேள் ஒன்று காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து அது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் உணவகத்திற்கு பொது சுகாதார பரிசோதகர் சென்ற வேளை , சுகாதார குறைப்பாடுகளை அவதானிதத்துடன் , ஏற்கனவே அறிவுறுத்தப்பட்ட திருத்த வேலைகளை செய்யாததையும் அவதானித்து , அது தொடர்பில் உரிமையாளருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை உரிமையாளர் தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து , உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , 45 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளதுடன் , கடையின் திருத்த வேலைகளை நிறைவு செய்யும் வரையில் கடைக்கு சீல் வைக்குமாறு சுகாதார பரிசோதகருக்கு மன்று உத்தரவிட்டது.