சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரிக்கு ஜனாதிபதியால் 110 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு…!
சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் கேட்போர் கூட கட்டிட நிர்மாணத்திற்கு 110மில்லியன் ரூபா நிதி ஜனாதிபதியினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன் முதல் கட்டமாக 70 மில்லியன் ரூபாய் நிதி இன்றைய தினம் பாடசாலை கட்டிட நிர்மாணத்துக்காக விடுவிக்கப்பட்டு கட்டட நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கடந்த 2019 ம் ஆண்டு சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரிக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அப்போதைய நல்லாட்சி அரசினால் 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது.
அதேவேளை அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாடசாலை பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு புதிய கேட்போர் கூட கட்டிடத்திற்கான அடிக்கல்லினையும் நாட்டி வைத்திருந்தார்.
அதனை தொடர்ந்து வந்த காலங்களில் நாட்டில் ஸ்திரமற்ற அரசியல் நிலை காரணமாக குறித்த வேலை திட்டம் முடிவுறுத்தப்படாது காணப்பட்டது.
இந்நிலையில், அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி கலந்து கொண்ட மருத்துவபீட புதிய கட்டிட திறப்பு விழாவில் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனால் குறித்த விடயம் ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கப்பட்டது.
அத்துடன் அது தொடர்பில் கல்வி இராஜாங்க முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஜனாதிபதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் கோரிக்கை விடுத்தார்/
அதனை அடுத்து 110 மில்லியன் ரூபா நிதியினை சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் கேட்போர்கூட கட்டிட நிர்மாணத்துக்காக ஒதுக்குமாறு ஜனாதிபதியினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதோடு முதல் கட்டமாக 70 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளது.
மிகுதி 40 மில்லியன் எதிர்வரும் வாரமளவில் விடுவிப்பதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் பிரதம செயலருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.