சீன இராணுவத்தில் புதுவரவு : கதி கலங்கப்போகும் எதிரி படைகள்
சீன(china) இராணுவம் தமது போர் நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றும் வகையில் ரோபோ நாயை(robot-dog) இணைத்துள்ளது.
இவ்வாறு அந்த நாய் இணைக்கப்பட்டது தொடர்பான தகவலை கம்போடியாவுடனான சமீபத்திய ராணுவப் பயிற்சியின்போது, சீன ராணுவம் காட்சிப்படுத்தியதாக சி.என்.என். செய்தி வெளியிட்டுள்ளது.
சீன இராணுவம் வெளியிட்ட காணொளி
ரோபோ நாய் தொடர்பான காணொளியை சீன அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. அந்த காணொளியில் பேசிய வீரர் ஒருவர், ‘இது நமது போர் நடவடிக்கைகளில் ஒரு புதிய உறுப்பினராக செயல்படும், உளவு பார்த்து எதிரிகளை அடையாளம் கண்டு, இலக்கைத் தாக்கவும் நமது வீரர்களுக்கு பதிலாக இந்த ரோபோக்களை சேர்க்க முடியும்’ என்று கூறுகிறார்.
சீனா இதுபோன்ற காணொளியை வெளியிடுவது இது முதல் முறையல்ல. கடந்த நவம்பர் மாதம் சீனாவில் நடைபெற்ற சீன, கம்போடிய, லாவோ, மலேசிய, தாய்லாந்து மற்றும் வியட்நாம் இராணுவத்தினர் பங்கேற்ற கூட்டுப் பயிற்சி தொடர்பான காணொளியில் துப்பாக்கி ஏந்திய ரோபோ விலங்குகள் காணப்பட்டன.
2020-ம் ஆண்டில், அமெரிக்க விமானப்படை தனது போர் மேலாண்மை அமைப்பில் ரோபோ நாய்கள் குறித்து செயல்விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
15 நாட்கள் மேற்கொள்ளும் போர்ப்பயிற்சி
சீனா, கம்போடிய படைகள் 15 நாட்கள் மேற்கொள்ளும் போர்ப்பயிற்சிக்கு, கோல்டன் டிராகன் என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 16-ம் திகதி தொடங்கிய இந்த பயிற்சி நாளை மறுநாள் (மே 30) நிறைவடைகிறது. 14 போர்க்கப்பல்கள், 2 ஹெலிகொப்டர்கள், 69 கவச வாகனங்கள் மற்றும் டாங்கிகள் பயிற்சியில் பயன்படுத்தப்படுகின்றன.