AI Camera உதவியை நாடும் பெங்களூரு மாநகரம்! சாலை பள்ளங்களை கண்டறிய புது முயற்சி
தண்ணீர் பஞ்சத்தில் தவித்து வரும் பெங்களூரு, அடுத்து வரும் மழைக் காலத்தை பொறுப்புடன் எதிர்கொள்ள செயற்கை நுண்ணறிவு (AI) உதவியை நாடியுள்ளது.
AI Camera உதவி
தற்போது கோடை காலத்தில் பெங்களூருவில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்திற்கு முறையான நடவடிக்கை மேற்கொள்ளாததே காரணம் என்று சொல்லப்படுகிறது.
இதனால், வரும் பருவமழையை பொறுப்புடன் எதிர்கொள்ள செயற்கை நுண்ணறிவு (AI) உதவியை பெங்களூரு மாநகரம் நாடியுள்ளது.
முக்கியமாக மழைக் காலங்களில் சாலைகளில் உள்ள பள்ளங்கள் தான் இருசக்கர வாகனங்களை விபத்துக்குள்ளாக்கும்.
இதனை சரிசெய்ய பெங்களூரு முன்வந்துள்ளது. இதற்காக, நகரச் சாலைகளில் உள்ள பள்ளங்களைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு கொண்ட கமெராக்களைப் (AI camera) பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த கமெராக்களை பயன்படுத்துவதன் மூலம் சாலைகளில் உள்ள பள்ளங்களை தாமாகவே அடையாளம் காணலாம்.
அதாவது, கமெராக்கள் பொருத்தப்பட்ட 15 வாகனங்களை ஊர் முழுவதும் உலா வர செய்ய வேண்டும். பள்ளங்கள் மட்டுமல்லாது சேதமடைந்த தெருவிளக்குகள், நடைபாதைகள் உள்ளிட்ட பிரச்சனைகளை கமெராக்கள் படம்பிடிக்கும்.
இதுகுறித்து பிபிஎம்பி கமிஷனர் துஷார் கிரிநாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கமெராக்கள் பொருத்தப்பட்ட 15 வாகனங்கள் 300 கிமீ பயணத்தில் தென்படும் பிரச்சினைகளை பதிவு செய்யும்.
இதன் மூலம் பிரச்சனைகளை விரைவாக சரிசெய்யலாம். பெங்களூருவின் வார்டு அளவிலான 1,344 கிமீ சாலைகளின் 5,600 பள்ளங்களையும், இதர சாலைகளின் சுமார் 500 பள்ளங்களையும் கண்டறிந்துள்ளது. இதில் கடந்த 4 நாட்களில் 1000 பள்ளங்கள் நிரப்பப்பட்டுள்ளது” என்றார்.