கிளிநொச்சியில் போதைப்பொருள் விற்பனையாளருடன் இருந்த காவல்துறை அதிகாரி கைது
கிளிநொச்சி(kilinochchi) ஆனந்தபுரம் கிழக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் போதைப்பொருள் விற்பனையாளருடன் தங்கியிருந்த உப காவல்துறை பரிசோதகர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர், ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் பணிபுரிந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார் என்று காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
வீட்டில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் தங்கியிருப்பதாக
மேற்படி வீட்டில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் தங்கியிருப்பதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் (27ம் திகதி) இரவு மேற்படி வீட்டை சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் 2,100 மில்லிகிராம் போதைப்பொருள் மற்றும் ஒருவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அந்த வீட்டில் மேலும் நான்கு பேர் இருந்ததாகவும், அவர்களை கைது செய்து சோதனையிட்டபோது, அவர்களில் இந்த சப்-இன்ஸ்பெக்டரும் இருந்ததாகவும் காவல்துறையினர் கூறினர்.
போதைப்பொருள் வியாபாரி இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு அங்கிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளாரா
சந்தேகத்திற்குரிய சப்-இன்ஸ்பெக்டர் இந்தக் குழுவுடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளாரா என்பது தெரியவரும் வகையில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேகத்திற்குரிய உப காவல்துறை பரிசோதகர் மற்றும் குழுவினர் போதைப்பொருள் உட்கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது, அதன்படி அவர்கள் சட்ட வைத்தியர் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.