;
Athirady Tamil News

யாழில் பாடசாலை மாணவிகளை கடுமையாக தாக்கிய அருட்சகோதரிக்கு நேர்ந்த கதி!

0

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் விடுதியில் பாடசாலை மாணவிகளை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அருட்சகோதரியை இன்று  (29-05-2024) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஊர்காவற்றுறை – கரம்பன் பகுதியிலுள்ள பெண்கள் பாடசாலை ஒன்றின் விடுதியில் 10 முதல் 17 வயதுக்குட்பட்ட 11 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

குறித்த விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி கடந்த 3 ஆண்டுகளாக அகப்பை காம்பு, தடி, தலைமுடியை பிடித்து சுவருடன் தாக்குவதென தம்மை சித்திரவதை செய்வதாக தெரிவித்து நேற்றையதினம் (27) ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

ஆங்கில உச்சரிப்பு தவறு. ஆங்கிலம் முறையாக பேசாதது, பிரார்த்தனையை முறையாக மனனம் செய்யாதது உள்ளிட்ட காரணங்களிற்காகவே அருட்சகோதரி தாக்குதல் நடத்தியதாக குறிப்பிடப்படுகிறது.

மேலும், பாடசாலை மாணவிகளுடன் உரையாடக்கூடாத கெட்ட வார்த்தைகளையும் உபயோகித்து திட்டுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் பாடசாலை நிர்வாகத்திடம் முறையிட்டும், பலனில்லாத நிலையில், நேற்று 11 மாணவிகளும் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

இந்நிலையில் குறித்த 11 மாணவிகளும் இன்று ஊர்காவற்றுறை பொலிசாரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவநாதனின் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் மாணவிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர்களின் உடலில் தாக்கப்பட்ட தழும்புகள் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து , மாணவிகள் தாக்கப்பட்ட விவகாரம் உறுதி செய்யப்பட்ட நிலையில், குறித்த 11 மாணவிகளும் ஊர்காவற்துறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இததையடுத்து, விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரியை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில், அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, பாடசாலை நிர்வாகத் தரப்பினர், முறைப்பாடளித்த மாணவிகளின் பெற்றோருக்கு அழுத்தம் கொடுத்து முறைப்பாட்டை வாபஸ் பெற முயல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவிகள், மருத்துவமனையிலும், பொலிசாரிடமும் குறிப்பிட்டுள்ளனர்.

முறைப்பாடளித்ததற்காக தமது பெற்றோர் தம்மை திட்டுவதாகவும் குறிப்பிட்டனர்.

இவ் விவகாரம் இன்று நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணவிகளுடன், இன்றிரவு பெற்றோர் தொடர்பு கொள்வதை தடுத்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், நாளை வைத்தியசாலைக்கு நீதிபதி நேரில் சென்று மாணவிகளுடன் உரையாடும் வரை, மாணவிகளுடன் பெற்றோர் தொடர்பு கொள்வதை தடுத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.