;
Athirady Tamil News

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகள் பெற்றுக்கொடுக்கப்படும் என கனேடிய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு

0

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh), கனடாவின் சர்வதேச அபிவிருத்திகளுக்கான பிரதி அமைச்சர் கிரிஸ்டோபர் மக்லணன் (Christopher MacLennan) உள்ளிட்ட குழுவினர் இன்று (29/05/2024) சந்தித்து கலந்துரையாடினார்கள். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

நல்லிணக்கச் செயற்பாடுகள், மீள்குடியேற்றம், கண்ணிவெடி அகற்றல், காணிவிடுவிப்பு, கல்வித்துறை மேம்பாடு, தொழில் முனைவோருக்கான ஒத்துழைப்புகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

கல்வி முறையில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்த ஆளுநர், அதற்கான மாதிரி செயற்பாடுகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். ஜனாதிபதி கடந்த வாரம் வடக்கிற்கு விஜயம் செய்தபோது, வைத்தியசாலைகளுக்கான புதிய பிரிவுகளை திறந்துவைத்ததுடன், பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்களையும், மக்களுக்கான காணி உறுதிகளையும் வழங்கி வைத்தார். இதனூடாக வடக்கு மாகாண மக்களுக்கு சிறந்த கல்வி மற்றும் சுகாதார சேவை மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

காணி உறுதிகளை வழங்கியமையால் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கும், பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கும் அதிக நன்மைகள் கிட்டும் என தெரிவித்த கௌரவ ஆளுநர் தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளும், கடன் வசதிகளும் தேவைப்படுவதாக கூறினார்.

இந்த விடயங்களை கேட்டறிந்த கனேடிய தூதுக்குழுவினர் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுக்க தாம் தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.