;
Athirady Tamil News

ரிமால் புயல் காரணமாக மீன்களின் விலை அதிகரிப்பு(video)

0

ரிமால் புயல் காரணமாக கடற்பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆழ்கடல் வள்ளங்கள் எவையும் மீன்பிடிக்க செல்லவில்லை.இருந்த போதிலும் கரை வலை மீன் வள்ளங்கள் மீன் பிடி நடவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றன.

அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவணை, கல்முனை , மருதமுனை, பாண்டிருப்பு ,பெரியநீலாவணை, நிந்தவூர் ,அட்டாளைச்சேனை, ஒலுவில், அக்கரைப்பற்று, தம்பிலுவில், பொத்துவில், பகுதிகளில் உள்ள மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் புயல் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் அண்மைக்காலமாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனால் மீன்களின் விலைகள் அதிகரித்துள்ளதுடன் சந்தைகளும் மீன்கள் இன்மையால் மூடி காணப்படுகின்றன.குறித்த மாவட்டத்தின் பெரிய நீலாவணை முதல் பொத்துவில் பகுதி வரையுள்ள கடற்பரப்பு உள்ளிட்ட கடற்பிராந்தியத்தில் மீன்களின் பிடிபாடு பெருமளவில் குறைவடைந்துள்ளது.

இதற்கு காரணம் சடுதியாக ஏற்பட்ட சீரற்ற காலநிலை மற்றும் நிலவு வெளிச்சம் போன்ற காரணத்தினால் மீன்களின் பிடிபாடு வெகுவாகக் குறைவடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடும் காற்றுக் காரணமாகக் கடல் கொந்தளிப்பு அதிகரித்துக் காணப்படுகின்றமை கடும் வரட்சியுடனான காலநிலை நிலவுகின்றமை ஆகிய காரணங்களே மீன்களின் விலை அதிகரிப்பிற்குக் காரணமெனவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஒரு கிலோ விளைமீன் 1600 ரூபாவாகவும் பாரை மீன் ஒரு கிலோ 2400 ரூபாவாகவும் இறால் ஒரு கிலோ 1800 ரூபாவாகவும் கணவாய் ஒரு கிலோ 1700 ஆகவும் சூடை மீன் ஒரு கிலோ 1000 ரூபாவாகவும் சுறா மீன் ஒரு கிலோ 2500 ரூபாயாகவும் வளையா மீன் 1500 ரூபா ஆகவும் நண்டு ஒரு கிலோ 1600 ரூபா ஆகவும் தற்போது மீனவர்களால் கடற்பரப்புக்களை அண்டிய பகுதிகளில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் இதர சில்லறை மீன் வகைகளின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.

கல்முனை மாநகரை அண்டிய மருதமுனை நற்பிட்டிமுனை பாண்டிருப்பு கல்முனை சாய்ந்தமருது பகுதிகளிலுள்ள மீன் சந்தைகளிலும் ஏனைய நிந்தவூர் மாளிகைக்காடு மீன் சந்தைகளிலும் மீன் வரத்துக்கள் மிகவும் குறைவடைந்துள்ளமையால் மீன்களின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.

கடற்கரையை அண்டிய பகுதிகளில் விற்கப்படும் விலைகளிலும் பார்க்க மூன்று மடங்கு அதிகரிப்பில் மேற்படி சந்தைகளில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை இப்பகுதியில் கடற் கருவாடுகள் ஆற்றுக்கருவாடுகளுக்கு கிராக்கி நிலவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.