எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் இனிவரும் காலத்துக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும் – யாழ் போதனா வைத்தியசாலை அசம்பாவிதம் குறித்து அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!
எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் இனிவரும் காலத்துக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும் – யாழ் போதனா வைத்தியசாலை அசம்பாவிதம் குறித்து அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!
யாழ் போதனா வைத்தியசாலையின் மகிமையையும் ஊழியர்களின் பாதுகாப்பையும் கருதி அடாவடியில் ஈடுபடுபட்ட நபர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இனிவரும் காலத்தில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் ஏற்படாத வகையிலான முன்னுதாரணமாக குறித்த நடவடிக்கை இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
அண்மைக்காலமாக யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுவரும் அசம்பாவிதங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இன்றையதினம் (30.05.2024) ஆராயப்பட்டது.
இதன்போது வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் பொலிசார் ஆகியோரிடம் அது குறித்து விளக்கம் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தபின் கருத்து கூறுகையிலேயே இவ்வாறு வலியுறுத்தியிருந்தார்.
இதன்போது யாழ் வைத்தியசாலை அசம்பாவிதங்கள் குறித்து கருத்துக்கூறிய பணிப்பாளர் சத்தியமூர்த்தி – வைத்தியசாலைக்கு நாளாந்தம் குறைந்தது 5000 அதிகமானவர்கள் அவசர நோயாளர் பிரிவுக்கு பல்வேறு அவசர உயிர் காப்பு தேவை கருதி வருவதுண்டு.
அதுமட்டுமல்லாது இவ்வாறு வருபவர்கள் பலவகையான வாகனங்களில் வருகைதருவதால் உயிர் பாதுகாப்பை கருதி தடையின்றி உள்ளே அனுமதிப்பது வழமை.
அந்த இளக்கமான நடைமுறையை தமக்கு சாதகமாம ஒருசிலர் பயன்படுத்துவதால்தான் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றது.
அதே நேரம் இவ்வாறான சம்பவங்களை வைத்து அவசர நோயாளர் பிரிவு நுழைவாயிலில் இறுக்கமான நடைறையை கொண்டுவரவும் முடியாது.
அந்தவகையில் வைத்தியசாலையின் பாதுகாப்பு அதன் மகிமைகள் குறித்து இளைஞர்கள் அதிக கரிசனை எடுப்பதனூடாகவே இவ்வாறான துர்ப்பாக்கிய நிலையை கட்டுப்படுத்தலாம். இதற்கு அனைவரது குறிப்பாக இளைஞர்களது ஒத்துழைப்பும் அவசியம் என்றும் கூறியிருந்தார்.
அத்துடன் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கடுமையான பிரிவுகளில் சட்டத்தின்முன் நிறுத்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இன்நிலையில் வைத்தியசாலையின் பாதுகாப்பில் பொலிசாரின் பங்கு அதிகளவில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள அமைச்சர் பொதுமக்களும் வைத்தியசாலையின் பாதுகாப்பு மற்றும் நலன்களில் அக்கறை கொள்வது அவசியம்.
இதேநேரம் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதன்மூலம் இனிவருங் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படாதவகையில் நடவடிக்கை அமைவதும் அவசியம் என்றும் உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.