;
Athirady Tamil News

கேரளத்தில் பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி: ஐ.சி.யூ.வான அரசுப் பேருந்து!

0

கேரளத்தின் மலப்புரத்தைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவருக்கு புதன்கிழமை மதியம் திருச்சூரில் இருந்து கோழிக்கோடு தொட்டில்பாலம் நோக்கிச் சென்றபோது கேஎஸ்ஆர்டிசி பேருந்தில் குழந்தை பிறந்தது.

பேருந்தில் பெரமங்கலம் வழியாக பிரசவத்திற்குச் சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருச்சூர் மாவட்டம் பெரமங்கலத்தை பேருந்து கடந்தபோது, ​​அந்தப் பெண்ணுக்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது. உடனே யோசித்த பேருந்து ஓட்டுநர், பேருந்தை வேறுவழியில் இயக்கி அமலா மருத்துவமனையை நோக்கி சென்றார். நடத்துநர் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தார். மருத்துவமனையை அடைந்ததும் பயணிகள் அவசரமாக கீழே இறக்கியதும், மருத்துவர்கள், செவிலியர்கள் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தனர்.

பேருந்து ஊழியர்கள், அமலா மருத்துவமனையின் சுகாதாரப் பணியாளர்கள் இருவரும் சரியான நேரத்தில் உதவியதன் மூலம், பேருந்துக்குள்ளேயே அவருக்கு ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்தது.

மருத்துவமனை வளாகத்தின் சிசிடிவி கேமராவில் பதிவான விடியோவில், கேஎஸ்ஆர்டிசி பேருந்து ஊழியர்களும், மருத்துவக் குழுவும் ஒருங்கிணைந்து செயல்பட்டதும், அந்த பெண்ணுக்கு தேவையான மருத்துவ உதவி கிடைத்திருப்பதும் பதிவாகியுள்ளது.

தாயும், குழந்தையும் பேருந்தில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு இருவரும் நலமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சரியான நேரத்தில் பேருந்தை மருத்துவமனைக்கு இயக்கி தாய், குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.