கிரிமியா அருகே உக்ரேனிய டிரோன்கள், ஏவுகணைகளை அழித்துவிட்டோம் – ரஷ்யா
கிரிமியன் தீபகற்பத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் 13 உக்ரேனிய டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரேனிய தாக்குதலை முறியடித்த ரஷ்யா
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான சண்டை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இருதரப்பில் இருந்து தாக்குதல்கள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் தெற்கு கிராஸ்னோடர் பிராந்தியத்திலும், இணைக்கப்பட்ட கிரிமியன் தீபகற்பத்திற்கு அருகில் உள்ள பகுதியிலும் உக்ரேனிய தாக்குதலை முறியடித்ததாக ரஷ்யா கூறியுள்ளது.
இதுகுறித்து ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கிராஸ்னோடர் பகுதியில் 5 உக்ரேனிய வான்வழி டிரோன்கள் விமான எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டன. மேலும், 8 டிரோன்கள் இரவு நேரத்தில் கருங்கடலுக்கு மேல், கிரிமியன் கடற்கரைக்கு அருகில் இடைமறிக்கப்பட்டன” என தெரிவித்துள்ளது.
ஏவுகணைகள்
அதாவது, கிரிமியாவை நோக்கி சென்ற இரண்டு உக்ரேனிய கடற்படை டிரோன்களையும் கருங்கடலில் அழித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
அதேபோல் அமெரிக்காவினால் வழங்கப்பட்ட 8 ATACMS ஏவுகணைகள், இணைக்கப்பட்ட தீபகற்பத்திற்கு அருகில் உள்ள அசோவ் கடல் மீது வான் பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறியது.