தேயிலைத் தோட்டங்கள் குறித்த அரசாங்கத்தின் அதிரடி உத்தரவு
பராமரிக்கப்படாத தேயிலை தோட்டங்களை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு விவசாய மற்றம் பெருந்தோட்டத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் குத்தகை அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ள தேயிலை தோட்டங்கள் தொடர்பில் இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை தேயிலைச் சபைக்கு அமைச்சர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
உரிய முறையில் பராமரிக்கப்படாத தேயிலை தோட்டங்களின் குத்தகை ஒப்பந்தங்களை முடிவுறுத்தி மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தேயிலை தோட்டங்களை குத்தகை அடிப்படையில் 28 நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.
இவ்வாறு குத்தகைக்கு வழங்கப்பட்ட நிறுவனங்களில் ஐந்து நிறுவனங்கள் மட்டுமே உரிய முறையில் தோட்டங்களை பராமரிப்பதாக தேயிலை சபை, அமைச்சருக்கு அறிவித்துள்ளது.
உரிய முறையில் தேயிலை செய்கை செய்யப்படுவதில்லை
தேயிலை தோட்டங்களை குத்தகைக்கு எடுத்த நிறுவனங்கள் தேயிலை செய்கையை உரிய முறையில் மேற்கொள்வதில்லை எனவும், சரியான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேயிலை செய்கையை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் 12000 மில்லியன் ரூபா பெறுமதியான தேயிலை உரத்தை மானியமாக வழங்கிய போதிலும் அநேக நிறுவனங்கள் உரத்தை உரிய முறையில் பயன்படுத்தவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.