வடகிழக்கு மாநிலங்களை புரட்டி போட்ட ரிமல் புயல்… மீட்பு பணிகள் தீவிரம்!
ரிமல் புயலால் வடகிழக்கு மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அசாமில் மட்டும் 9 மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் பேர் கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரிமல் புயல் வடகிழக்கு மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிட்டு சென்றுள்ளது. வழக்கத்துக்கு மாறாக கோடைக்காலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் அசாமின் தெற்கு பகுதியான திமா ஹாசோ, நகோன், கரீம்கஞ்ச், ஹோஜாய், கோலாகத் உள்ளிட்ட பகுதிகள் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளன.
இந்த பகுதிகளில் மட்டும் 1 லட்சத்து 99 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர். 3ஆயிரத்து 238 ஹெக்டேர் விளைநிலங்கள் மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ளன. 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 110 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திமா ஹாசோ மாவட்டத்தில் சாலை போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு வெள்ளத்தில் சிக்கிய பெண்ணை உள்ளூர் மக்கள் கயிறு கட்டி மீட்டனர்.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டித்தீர்த்தது. இம்பாலில் உள்ள க்வைரம்பேண்ட் மார்கெட் பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர்
இம்பாலில் ஆதரவற்றோர் இல்லத்தில் சிக்கியிருந்த 42 பேரை அசாம் ரைஃபிள் குழுவினர் பாதுகாப்பாக படகுகளில் மீட்டனர். முக்கிய வீதிகளில் ஆறுகள் போல தண்ணீர் சென்ற நிலையில் பாத்திரங்களில் வைத்து குழந்தைகளை மக்கள் மீட்ட காட்சி காண்போரை கண் கலங்கச்செய்தது.
அசாம் மேகாலயா தேசிய நெடுஞ்சாலையில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு நேரிட்டது. திரிபுரா, மிசோரம், வடக்கு மணிப்பூரை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலை வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் துண்டிக்கப்பட்டது.
aவீடுகளுக்குள் 4 அடி வரை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மின்சாரம், குடிநீர் இன்றி மக்கள் தவிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.