பாலியல் வழக்கில் தப்பியோடிய பிரஜ்வல் ரேவண்ணா விமான நிலையத்தில் கைது !
பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனியில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்பிய நிலையில் போலீசார் அவரை பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தையான எச்.டி. ரேவண்ணாவின் வீட்டில் வேலை செய்த பணிப்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ரேவண்ணாவும் அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணாவும் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றஞ்சாட்டினார். அதோடு அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் வெளியானது. இதனையடுத்து இருவர் மீதும் பாலியல் தொல்லை, மிரட்டல், பின் தொடர்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டது.
இதனிடையே கடந்த ஏப்ரல் 26-ம் தேதி இரவு பிரஜ்வல் ஜெர்மனிக்கு தப்பியோடியதாக தகவல்கள் வெளியாகின. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் 2 முறை லுக் அவுட் நோட்டீஸும் ஒரு முறை புளூ கார்னர் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டதோடு தேவகவுடா உள்ளிட்டோர் உடனடியாக நாடு திரும்புமாறு பிரஜ்வலுக்கு கோரிக்கை விடுத்தனர்.
ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து பெங்களூரு திரும்புவதற்கான விமான டிக்கெட்டை பிரஜ்வல் முன்பதிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்த நிலையில், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு விசாரணைக் குழு தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
முன்னதாக, பிரஜ்வல் ரேவண்ணா தரப்பில் முன் ஜாமீன் கோரி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தனஞ்செய், ‘‘இந்த மனுவை அவசர மனுவாக கருதி உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என கோரிக்கை வைத்திருந்தார். அதனை ஏற்க மறுத்த நீதிபதி, மே 31 வழக்கை விசாரிப்பதாக கூறியிருந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.