எதிர்ப்புக்களை மீறி தையிட்டி விகாரைக்கு அருகில் புதிய கட்டடம் – மூடி மறைக்க முயற்சித்த யாழ்.மாவட்ட பதில் செயலர்
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் தனியார் காணிகளை கையகப்படுத்தி , விகாரை அமைக்கப்பட்டுள்ள நிலையில் விகாரையை அண்மித்த பிறிதொரு தனியாரின் காணியில் மற்றுமொரு சட்ட விரோத கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.
தையிட்டி பகுதியில் பொதுமக்களின் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி சட்டவிரோதமான முறையில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது
குறித்த விகாரையை அகற்றி, காணிகளை காணி உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என கடந்த ஒரு வருட காலமாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் விகாரை அமைந்துள்ள பகுதிக்கு அண்மித்த பகுதியில் உள்ள மற்றுமொரு தனியார் காணியில் சட்ட விரோத கட்டடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு , குறித்த கட்டடத்திற்கான அனுமதி எவ்வாறு வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு மாவட்ட பதில் செயலாளர் , அவ்வாறு எந்த கட்டடமும் அமைக்கப்படவில்லை.தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட விகாரை அமைந்துள்ள பகுதிக்கு சென்று இருந்தேன்.அதன் போது அங்கு கட்டடம் எதுவும் கட்டப்படவில்லை என்பதனை உறுதியாக கூறுகிறேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில் , விகாரை அமைந்துள்ள காணிக்கு அருகில் உள்ள மற்றுமொரு தனியார் காணியில், மடம் போன்றதான அமைப்பில் புதிய கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருவதுடன் , அதன் 70 வீதமான கட்டட பணிகள் பூர்த்தியாகியள்ளமை தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.