உள்நாட்டுப் போர் வெடிக்கும்… அச்சுறுத்தும் ட்ரம்ப் ஆதரவாளர்கள்: நாடு தழுவிய போராட்டங்களுக்கு அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் குற்றவாளி என நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அவரது ஆதரவாளர்களிடையே இந்த விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டுப் போர் வெடிக்கும்
சில ட்ரம்ப் ஆதரவாளர்கள் உள்நாட்டுப் போர் வெடிக்கும் என்று அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதனிடையே, தீவிர வலதுசாரி ஆதரவாளரான Stew Peters என்பவர் டெலிகிராம் செயலியில் தமது நூறாயிரக்கணக்கான பின்தொடர்பாளர்களிடம் தெரிவிக்கையில்,
நமது நீதித்துறை ஆயுதமாக்கப்பட்டுள்ளது, நடவடிக்கைகளை நாம் முன்னெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள அவரது ஆதரவாளர்கள், நீதிமன்றங்களை எரித்து கலவரத்தில் ஈடுபட வேண்டும் என்று கொந்தளித்துள்ளனர்.
பொதுவாகவே ட்ரம்பின் ஆதரவாளர்கள் கலவரங்களை தூண்டுபவர்கள் என்பதுடன், ட்ரம்பும் அவர்களை தூண்டிவிடும் கருத்துகளை மட்டுமே பதிவு செய்தும் வந்துள்ளார்.
உண்மைத்தன்மை இல்லை
மேலும், தற்போது ட்ரம்புக்கு தண்டனை அளிக்கப்பட்டாலும், ஜனாதிபதி தேர்தலை அது பாதிக்காது என்றும், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனை வீழ்த்தும் நிலையிலேயே அவருக்கு ஆதரவு இருப்பதாகவும் கூறுகின்றனர்.
ஏற்கனவே ட்ரம்ப் ஆதரவாளர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். மட்டுமின்றி, இந்த தீர்ப்பை அவமானகரமானது என்று ட்ரம்ப்பே குறிப்பிட்டுள்ளார்.
தாம் ஒரு அப்பாவி என்றும், இந்த வழக்கு விசாரணையில் உண்மைத்தன்மை இல்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.