ஜேர்மனியை அதிரவைத்த கத்திக்குத்து சம்பவம்: காயமடைந்த பொலிசார் கவலைக்கிடம்
ஜேர்மனியில், இஸ்லாம் எதிர்ப்பு பேரணி ஒன்றின்போது, திடீரென ஒருவர் கத்திக் குத்து தாக்குதல் நடத்தியதில், ஒரு பொலிசார் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். அதில், அந்த பொலிசாரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜேர்மனியை அதிரவைத்த கத்திக்குத்து சம்பவம்
நேற்று ஜேர்மன் நகரமான Mannheimஇல் இஸ்லாம் எதிர்ப்புப் பேரணி ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஒருவர் அங்கிருந்தவர்களைக் கத்தியால் தாக்கத் துவங்கினார். பொலிசார் ஒருவர் உட்பட ஆறு பேருக்கு காயங்கள் ஏற்பட, பொலிசார் ஒருவர் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டார்.
ஜேர்மனியை அதிரவைத்த இந்தக் காட்சிகள் அடங்கிய பயங்கர வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
காயமடைந்த பொலிசார் கவலைக்கிடம்
இந்நிலையில், அந்த கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த பொலிசார் ஒருவருடைய நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக இன்று அவரது சக பொலிசார் தெரிவித்துள்ளனர். அவருக்கு முதுகிலும் தலையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இதற்கிடையில், பொலிசாரால் சுடப்பட்ட தாக்குதல்தாரிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் விசாரணைக்குட்படுத்த இயலாத நிலையிலிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
அவரைக் குறித்த விவரங்களை பொலிசார் வெளியிடாவிட்டாலும், 25 வயதுடைய அவர் ஆப்கன் நாட்டவர் என்றும், 2013ஆம் ஆண்டு முதல் ஜேர்மனியின் Hesse மாகாணத்தில் வாழ்ந்துவருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.