;
Athirady Tamil News

General Election: மொத்தம் 500 ஆசனங்கள் வரையில்… ரிஷி சுனக் கட்சிக்கு பேரிடியாகும் ஆய்வறிக்கை

0

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ரிஷி சுனக் கட்சியின் ஆதிக்கத்திற்கு மொத்தமாக முற்றுப்புள்ளிவைக்கும் வகையில் 500 ஆசனங்கள் வரையில் லேபர் கட்சி அதிரடியாக கைப்பற்றும் என்ற ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

அசுர பலத்துடன் ஆட்சி
பொதுத்தேர்தல் தொடர்பில் 10,000க்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்துகளை இந்த மிகப்பெரிய ஆய்வில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் மொத்தமுள்ள 650 ஆசனங்களில் லேபர் கட்சி 476 முதல் 493 ஆசனங்கள் வரையில் கைப்பற்றி அசுர பலத்துடன் ஆட்சிக்கு வரலாம் என்றும்

பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க முடியாமல் பிரதமர் ரிஷி சுனக் தத்தளிக்கிறார் என்றும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் ரிஷி சுனக் கட்சியினர் 66 முதல் 72 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றும் மிக மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அதாவது பிரித்தானிய தேர்தல் வரலாற்றில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி மிக மோசமான தோல்வியை எதிர்கொள்ள இருக்கிறது. 2019ல் லேபர் கட்சி 33 சதவீத வாக்குகளுடன் 197 ஆசனங்களை மட்டுமே வென்றிருந்தது.

அந்த நிலையில் இருந்து மீண்டு தற்போது கிட்டத்தட்ட 500 ஆசனங்களை கைப்பற்றும் நிலைக்கு முன்னேறியுள்ளது. ஆனால் ரிஷி சுனக் கட்சி 300 ஆசனங்களுக்கு மேல் இழப்பை சந்திக்க உள்ளது.

தோல்வி முகத்தில் 18 அமைச்சர்கள்
1997ல் லேபர் கட்சி 419 ஆசனங்களுடன் ஆட்சிக்கு வந்தது. அதுவே தற்கால நாடாளுமன்ற வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியாக பதிவாகியிருந்தது. ஆனால் தற்போது லேபர் கட்சி 500 ஆசனங்கள் வரையில் கைப்பற்றலாம் என கூறப்படுகிறது.

இதனால் அடுத்த பொதுத்தேர்தலிலும் லேபர் கட்சியே மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்றும், மாபெரும் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் ஒரு கட்சி, அடுத்த தேர்தலிலும் தொடரும் வாய்ப்பே அதிகம் என்றும் கூறுகின்றனர்.

இதனிடையே, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் 18 அமைச்சர்கள் வெற்றிவாய்ப்பை இழப்பார்கள் என்றும், குறிப்பாக Oliver Dowden, James Cleverly மற்றும் Grant Shapps ஆகியோர் தோல்வி முகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Liberal Democrats கட்சி இந்தமுறை 39 முதல் 59 ஆசனங்கள் வரையில் கைப்பற்றும் என்றே கணிக்கப்படுகிறது. 2019 தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி 348 ஆசனங்களும் லேபர் கட்சி 200 ஆசனங்களும் Liberal Democrats கட்சி 15 ஆசனங்களும் கைப்பற்றியிருந்தன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.