அருணாச்சல பிரதேசம் – சிக்கிம் சட்டமன்ற முடிவுகள் – மீண்டும் பாஜக ஆட்சியா? வாக்கு பதிவுகள் எண்ணிக்கை மும்முரம்
அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
அருணாச்சல பிரதேசம்
அருணாச்சல பிரதேசத்தில் மொத்த சட்டமன்ற தொகுதிகள் – 60. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்,தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தமாக 51 இடங்களுடன் ஆட்சியை கைப்பற்றியது.
இதில் பாஜக 48 , தேசிய மக்கள் கட்சி(NPP) – 2, சுயேச்சை – 1. காங்கிரஸ் 1 இடம் மட்டுமே கைப்பற்ற்றியது. தற்போது நடைபெற்று முடிந்த தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேசிய மக்கள் கட்சி 20 இடங்களில் போட்டியிட்டுள்ள நிலையில், பாஜக 60 இடங்களிலும், காங்கிரஸ் 19, தேசியவாத காங்கிரஸ் 14 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளன.
இதில் அன்னபோஸ்டாகவே 10 இடங்களை தேர்தலுக்கு முன்பே பாஜக வென்றுவிட்டது. அதன் காரணமாக தேர்தல் மீதமுள்ள 50 தொகுதிகளுக்கு தான் நடைபெற்றது. இதில், தற்போதைய நிலவரப்படி 13 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. பிற கட்சிகள் 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
சிக்கிம்
மற்றுமொரு வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் 32 சட்டமன்ற தொகுதிகள். 2019 தேர்தலில் மாநில கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 17 இடங்களை வென்று ஆட்சி அமைத்தது.
எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 இடங்களை வென்று இருந்தது. இங்கு தேசிய கட்சிகளின் ஆதிக்கம் குறைவே. இம்முறை தேர்தலிலும் தேசிய கட்சிகள் தனித்துள்ளன.சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகள் தனித்து 32 இடங்களிலும், பாஜக 31 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும் போட்டியிட்டன.
மும்முரமாக நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி, ஆளும் கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 24 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி 1 இடத்தில முன்னிலையில் உள்ளது.