நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக களனி, களு, கிங் மற்றும் நில்வலா ஆறுகளை சூழவுள்ள தாழ் நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி களுகங்கையின் மேல்பகுதியில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், இதன் காரணமாக அடுத்த 48 மணித்தியாலங்களில் இரத்தினபுரி (Ratnapura) மாவட்டத்தின் பிரதேச செயலகப் பிரிவுகளில் பெல்மடுல்ல , நிவித்திகல, குருவிட்ட, அயகம, எலபாத்த, போன்ற தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் சாத்தியம் காணப்படுகின்றது.
அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, ஹொரணை, தொடங்கொட மற்றும் மில்லனிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் சாத்தியம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை
நில்வலா கங்கையின் மேல் பகுதியில் நேற்று (01) இரவு முதல் பெய்து வரும் கணிசமான மழை காரணமாக பஸ்கொட, கொட்டபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, கம்புருபிட்டிய, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர பிரதேச செயலகப் பிரிவுகள் வெள்ளத்தில் மூழ்கும் சாத்தியம் காணப்படுகின்றது.
அத்துடன், களனி ஆற்றின் மேல் பகுதிகளில் நேற்று இரவு முதல் கணிசமான மழை பெய்து வருவதால், தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சீதாவக்க, தொம்பே, ஹோமாகம, கடுவெல ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட தாழ்நிலப் பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.