;
Athirady Tamil News

சூடுபிடிக்கும் அதிபர் தேர்தல்: ரணில் – மகிந்த விசேட சந்திப்பு

0

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் (Ranil Wickremesinghe) சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கும் (Mahinda Rajapaksa) இடையிலான விசேட கலந்துரையடல் எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான அதிபர் தேர்தலை (Presidential Election) நடத்துவதற்கான முக்கிய விடயத்தினை அரசாங்கம் அறிவிக்கவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொதுஜன பெரமுனவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் அதிபர் தேர்தலை மையப்படுத்திய பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் மிக நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றது. அந்த பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.

ராஜித சேனாரத்ன இணையவுள்ளார்
பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 17ஆம் திகதி அதிபர் தேர்தல் தொடர்பிலான கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளார்.

ஜக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட வேறு பல கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் இணையவுள்ளதுடன் முதலாவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 28ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன அதிபர் ரணிலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் தரப்பினரை ஒன்றிணைத்து அரசாங்கத்தில் இணையுமாறு அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மகிந்த அமரவீர ஏற்பாடு
அத்துடன் ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா (Nimal Lanza) தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியினர் 8ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் (Hambantota) இடம்பெறவுள்ள கூட்டத்தில் அதிபரை ஆதரிக்கும் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளனர். இந்த கூட்டத்தை அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) ஏற்பாடு செய்கின்றார்.

அத்துடன் அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஏற்பாட்டில் மாத்தறையில் எதிர்வரும் 16ஆம் திகதி கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை இந்த மாதம் தொடக்கத்தில் ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பிரசாரப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.