நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய சீன செயற்கைக்கோள்
சாங்கே-6 விண்கலம், சீன நேரப்படி நேற்று (02) காலை நிலவின் அய்த்கன் பேசின் என்ற தென்துருவத்தின் பெரிய பள்ளத்தில் தரையிறங்கியதை சீன அரசாங்கம் உறுதிப்படுத்தியது.
அதன்படி நிலவில் மாதிரிகளை சேகரித்துக் கொண்டு எதிர்வரும் 25 ஆம் திகதி சாங்கே – 6 எனும் விண்கலம் பூமிக்கு திரும்பும் எனவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சீனாவின் குறித்த திட்டத்தின்படி, இயந்திர கரம் மற்றும் துளை போடும் இயந்திரத்தின் உதவியுடன் நிலவின் மேல்பரப்பு மற்றும் அடிப்பரப்பில் உள்ள 2 கிலோ அளவிலான பொருட்களைச் சேகரித்து அவற்றை உலோக கொன்டெய்னரில் நிரப்பி ஆர்பிட்டருக்கு திரும்பி கொண்டு வரும்.
அமெரிக்காவுக்கு போட்டியாக சீனா
தொடர்ந்து கொன்டெய்னர் பொருட்கள் கேப்சூலுக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் சீனாவின் இன்னர் மங்கோலியா பகுதியிலுள்ள பாலைவன பகுதியில் வந்து தரையிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு(Americas ) போட்டியாக சீனாவும்(China) களமிறங்கி உள்ளதுடன், சீனாவின் நிலவுக் கடவுளான சாங்கே என்ற பெயரிலான திட்டத்தின் கீழ் விண்கலங்கள் அடுத்தடுத்து அனுப்பப்பட்டு வருகின்றன.
இவற்றில், 2020-ம் ஆண்டில் சாங்கே-5 விண்கலம் நிலவில் சென்று மாதிரிகளை சேகரித்து பூமிக்கு திரும்பியது.
இதன் தொடர்ச்சியாக, தற்போது சாங்கே – 6 எனும் விண்கலம் நிலவிற்கு அனுப்பப்பட்டு ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.