பஞ்சாப்: சரக்கு ரயில்கள் மோதல்
பஞ்சாப் மாநிலத்தில் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மற்றொரு சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரு ரயில் ஓட்டுநா்கள் காயமடைந்தனா்.
இது குறித்து ரயில்வே காவல் துறை அதிகாரி கூறியதாவது: பஞ்சாப் மாநில ஃபதேகா் சாஹிப் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹிந்த் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்பகுதியில் மற்றொரு சரக்கு ரயில் மோதியது. இதில், அந்த ரயில் என்ஜின், பக்கத்தில் அருகில் உள்ள தண்டவாளத்தில் புரண்டு பயணிகள் ரயிலின் மீது மோதியது. இந்தச் சம்பவத்தில், ரயில் ஒட்டுநா்கள் விகாஸ் குமாா் மற்றும் ஹிமன்ஸு குமாா் காயமடைந்தனா். ஆனால், அதிருஷ்டவசமாக எந்தவித உயிா்ச் சேதமும் ஏற்படவில்லை.
காயமடைந்த ஓட்டுநா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விபத்து பகுதியில் மறுசீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பாதையில் செல்லும் ரயில்கள் ராஜ்புரா, பாட்டியாலா, துரி மற்றும் சண்டீகா் வழியே திருப்பிவிடப்பட்டன என அதிகாரி தெரிவித்தாா்.
விபத்து குறித்து மாநில முதல்வா் பகவந்த் மான் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஸ்ரீஹிந்த் ரயில் நிலையத்தில் இரு சரக்கு ரயில்கள் மோதிய விபத்தில் அனைத்து உதவிகளும் வழங்க மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்’ எனக் குறிப்பட்டாா்.