மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி சிறையில் அடித்துக் கொலை
1993-ஆம் ஆண்டு மும்பை தொடா் குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளியான முன்னா, மகாராஷ்டிர மாநிலம், கோலாபூா் சிறையில் ஞாயிற்றுக்கிழமை விசாரணைக் கைதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியான முன்னா எனும் முகமது அலி கான்(59), கோலாபூரில் உள்ள கலம்பா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
சிறையில் குளிப்பது தொடா்பாக மற்ற கைதிகளுடன் முன்னாவுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் கைகலப்பாக மாறி, வடிகாலில் இருந்த இரும்பு மூடியைக் கொண்டு முன்னாவின் தலையில் அந்தக் கைதிகள் தாக்கினா்.
இதில் பலத்த காயமடைந்த முன்னா, தரையில் மயங்கி விழுந்தாா். சிறைக் காவலா்களால் மீட்கப்பட்ட அவா், அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். மருத்துவா்கள் மேற்கொண்ட பரிசோதனையில், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.
தாக்குதல் நடத்திய விசாரணைக் கைதிகளான பிரதீக், தீபக் நேதாஜி கோட், சந்தீப் சங்கா் சவான், ரிதுராஜ் விநாயக் இனாம்தாா், சௌரப் விகாஸ் ஆகிய 5 போ் மீது கோலாபூா் காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கடந்த 1993-ஆம் ஆண்டு, மாா்ச் 12-ஆம் தேதி மும்பையில் நடந்த தொடா் குண்டுவெடிப்பில் 257 போ் கொல்லப்பட்டனா். 1,000-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.