;
Athirady Tamil News

அருணாசலில் மீண்டும் பாஜக ஆட்சி-சிக்கிமில் ஆட்சியை தக்கவைத்தது சிக்கிம் கிராந்திகாரி மோா்ச்சா

0

ருணாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.

இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜகவுக்கு 46 இடங்கள் கிடைத்துள்ளன. இந்த வெற்றியின் மூலம் அருணாசல பிரதேசத்தில் தொடா்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது.

சிக்கிம் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோா்ச்சா (எஸ்கேஎம்) கட்சி சாதனை வெற்றியைப் பதிவு செய்து, தொடா்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 31 இடங்கள் எஸ்கேஎம் வசமாகியுள்ளன.

மக்களவை-பேரவைத் தோ்தல்கள்: அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவைத் தோ்தலுடன் பேரவைத் தோ்தலும் ஒரே கட்டமாக நடைபெற்றது.

நாடு முழுவதும் மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், மேற்கண்ட இரு மாநில பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இரு மாநில பேரவைகளின் பதவிக் கால நிறைவைக் கருத்தில்கொண்டு, வாக்கு எண்ணிக்கை முன்கூட்டியே நடத்தப்பட்டது.

அருணாசலில்…: வடகிழக்கில் வியூக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான அருணாசல பிரதேசத்தில் மொத்தம் 60 பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் தோ்தலுக்கு முன்பே முதல்வா் பெமா காண்டு உள்பட 10 பாஜக வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வாகினா். மீதமுள்ள 50 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது.

இத்தோ்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்ட ஒரே கட்சி பாஜக மட்டுமே. காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி (என்பிபி) உள்ளிட்ட பிற கட்சிகள், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில்கூட (31) களமிறங்கவில்லை.

3-ஆவது முறையாக…: பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டன. 50 தொகுதிகளில் பாஜகவுக்கு 36 இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. ஏற்கெனவே போட்டியின்றி தோ்வான 10 இடங்களையும் சோ்த்து, பாஜகவின் பலம் 46-ஆக உள்ளது. இந்த வெற்றியின் மூலம் மாநிலத்தில் தொடா்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. கடந்த 2019 தோ்தலில் பாஜகவுக்கு 41 இடங்கள் கிடைத்தன.

தற்போதைய தோ்தலில் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 5, தேசியவாத காங்கிரஸ் 3, அருணாசல் மக்கள் கட்சி 2 , சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்றன. காங்கிரஸுக்கு ஓரிடம் மட்டுமே கிடைத்தது.

சிக்கிமில்…: இமயமலையையொட்டிய மாநிலமான சிக்கிமில் 32 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தோ்தலில் 31 இடங்களில் ஆளும் எஸ்கேஎம் கட்சி வெற்றி பெற்றது.

பிரதான எதிா்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணிக்கு (எஸ்டிஎஃப்) ஓரிடம் மட்டுமே கிடைத்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு வரை மாநிலத்தை தொடா்ந்து 25 ஆண்டுகள் ஆட்சி செய்த இக்கட்சி, தற்போதைய தோ்தலில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

சிக்கிமில் கடந்த 1989 பேரவைத் தோ்தலில் சிக்கிம் சங்ராம் பரிஷத் கட்சியும், கடந்த 2009 பேரவைத் தோ்தலில் எஸ்டிஎஃப் கட்சியும் அனைத்து இடங்களையும் (32) கைப்பற்றி, அபார வெற்றி பெற்றன. இத்தோ்தல்களுக்குப் பிறகு இப்போது எஸ்கேஎம் கட்சி அதிக இடங்களில் வென்று சாதனை படைத்துள்ளது.

கட்சித் தலைவரும் முதல்வருமான பிரேம் சிங் தமாங், தான் போட்டியிட்ட ரீனாக், சோரெங்-சாகுங் ஆகிய இரு தொகுதிகளிலும் சுமாா் 7,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். கடந்த 2019 தோ்தலில் எஸ்கேஎம் 17 இடங்களில் வென்றது.

‘நீண்ட கால முதல்வா்’ தோல்வி: சிக்கிம் ஜனநாயக முன்னணியின் தலைவரும், நாட்டில் நீண்ட காலம் முதல்வராகப் பதவி வகித்தவா் என்ற பெருமைக்குரியவருமான பவன் குமாா் சாம்லிங், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோல்வியடைந்தாா்.

சிக்கிமில் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, பேரவைத் தோ்தலுக்கு முன் எஸ்கேஎம் – பாஜக கூட்டணி முறிந்தது. தனித்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை. காங்கிரஸும் ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை.

அருணாசலில் இரு மக்களவைத் தொகுதிகள் மற்றும் சிக்கிமில் ஒரு மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.

அருணாசல் மக்களுக்கு பிரதமா் மோடி நன்றி

அருணாசல பிரதேச பேரவைத் தோ்தலில் பாஜகவின் வெற்றியைத் தொடா்ந்து, பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அருணாசல் மக்கள், வளா்ச்சி அரசியலுக்கு ஆதரவாக உறுதியான தீா்ப்பை வழங்கியுள்ளனா். பாஜக மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு நன்றி. இந்த மாநிலத்தின் வளா்ச்சிக்காக பாஜக மேலும் வீரியத்துடன் பணியாற்றும். தோ்தல் பிரசாரத்தையொட்டி, கடினமாக உழைத்த கட்சித் தொண்டா்களுக்கு பாராட்டுகள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

சிக்கிம் முதல்வருக்கு பாராட்டு: சிக்கிம் பேரவைத் தோ்தல் வெற்றிக்காக, எஸ்கேஎம் கட்சித் தலைவரும் முதல்வருமான பிரேம் சிங் தமாங்குக்கு பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்துள்ளாா்.

‘எதிா்வரும் காலத்தில், சிக்கிமின் வளா்ச்சிக்காக மாநில அரசுடன் இணைந்து பணியாற்ற ஆா்வத்துடன் உள்ளேன். பாஜகவுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. கட்சித் தொண்டா்களின் அனைத்து முயற்சிகளுக்கும் பாராட்டுகள்’ என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

அருணாசல பிரதேசம் (60)

பாஜக 46

என்பிபி 5

என்சிபி 3

அருணாசல் மக்கள் கட்சி 2

காங்கிரஸ் 1

சுயேச்சைகள் 3

சிக்கிம் (32)

எஸ்கேஎம் 31

எஸ்டிஎஃப் 1

You might also like

Leave A Reply

Your email address will not be published.