தில்லியில் நாய்க்கு நுண்ணிய இதய அறுவை சிகிச்சை
தில்லி தனியாா் கால்நடை மருத்துவமனையில் ‘மிட்ரல் வால்வு’ இதய பாதிப்பு கொண்ட வளா்ப்பு நாய்க்கு நுண்ணிய இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
மிக குறைந்த அளவிலான துளையிடுதல் கொண்ட இவ்வகை அறுவை சிகிச்சை, இந்திய துணைக் கண்டத்தில் முதல்முறையாக மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கால்நடை மருத்துவா்கள் கூறினா்.
இதுதொடா்பாக தில்லி, கிழக்கு கைலாஷ் பகுதியில் அமைந்த ‘மேக்ஸ் பெட்இசட்’ தனியாா் கால்நடை மருத்துவமனையின் விலங்குகளுக்கான இதய சிகிச்சை நிபுணா் மருத்துவா் பானு தேவ் சா்மா கூறுகையில், ‘ஏழு வயது ‘பிகள்’ வகை வளா்ப்பு நாயான ஜூலியட், கடந்த 2 ஆண்டுகளாக மிட்ரல் வால்வு பாதிப்பால் அவதிப்பட்டு வந்தது. பாதிப்பின் விளைவாக, நாய்க்கு இதய செயலிழப்புகூட ஏற்பட்டிருக்கலாம். ஜூலியட்டுக்கு கடந்த ஓராண்டாக இதயநோய் மருந்துகளை நாயின் உரிமையாளா்கள்அளித்து வந்தனா்.
ஜூலியட்டுக்கான நுண்ணிய அறுவை சிகிச்சை எங்கள் மருத்துவமனையில் கடந்த 30-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. இது இதய துடிப்பை நிறுத்தாமல் மேற்கொள்ளப்படும் நடைமுறையாகும். 2 ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தில் இந்த அறுவை சிகிச்சை முதல் முறையாக செய்யப்பட்டது.
அமெரிக்க பயணத்தின்போது இதுதொடா்பாக நாயின் உரிமையாளா்கள் தெரிந்து கொண்டனா். தொடா்ந்து, நான் உள்பட 5 மருத்துவா்கள் கொண்ட குழு கடந்த ஆண்டு சீனாவின் ஷாங்காய் நகருக்கு பயணம் செய்து, இதைப் பற்றி கற்றறிந்தோம்.
தனியாா் மருத்துவா்களில் ஆசியாவில் முதலாவதாகவும் உலகில் 2-ஆவதாகவும் எங்கள் குழு இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளது. அறுவை சிகிச்சை முடிந்து இரண்டு நாள்களுக்குப் பிறகு, சீரான உடல் நிலையுடன் ஜூலியட் வீடு திரும்பியது’ என்றாா்.
‘மிட்ரல் வால்வு’ பாதிப்பு என்பது இந்தியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் உள்ள நாய்களில் மிகவும் பொதுவான இதயநோயாகும். உலகெங்கிலும் உள்ள நாய்களின் இதய நோய்களில் 80 சதவீதம் மேல் பாதிக்கும் இந்த நோய், நாய்களின் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்று என மருத்துவா் சா்மா கூறினாா்.