வாழ்க்கையை தொலைத்தேன்… விமானம் குலுங்கிய விபத்தில் சிக்கிய பிரித்தானியரின் தற்போதைய நிலை
லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானம் ஒன்று நடுவானில் திடீரென்று குலுங்கி விபத்தில் சிக்கியதில் படுகாயமடைந்த பிரித்தானியர் ஒருவர் தமது தொழில் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்.
தலையில் பலத்த காயம்
எசெக்ஸ் பகுதியை சேர்ந்த 29 வயது பொறியாளர் பிராட்லி ரிச்சர்ட்ஸ் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட 20 தையல்கள் தேவைப்பட்டன. அத்துடன் ஆறு முதுகெலும்பு மற்றும் கழுத்து எலும்பு முறிவுகள் மற்றும் உள் இரத்தப்போக்கு ஏற்பட்டது.
சம்பவத்தன்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில், லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு பிராட்லி பயணப்பட்டுள்ளார். விமானம் மியான்மருக்கு மேலே பறக்கும் போது திடீரென்று பலமாக குலுக்கிங்கியுள்ளது.
இதில் பலர் காயங்களுடன் தப்பிய நிலையில், 73 வயதான பிரித்தானியர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். விபத்தில் சிக்கிய விமானம் உடனடியாக தாய்லாந்தில் தரையிறக்கப்பட்டு, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தற்போது தாய்லாந்தில் சிகிச்சையில் இருக்கும் பிராட்லியிடம் மருத்துவர்கள் தெரிவிக்கையில், இனி அவரது தொலைத்தொடர்பு பொறியாளர் பணிக்கு திரும்புவது என்பது கடினம் என குறிப்பிட்டுள்ளனர்.
ஜீரணிக்கவே முடியவில்லை
கடந்த 7 ஆண்டுகளாக தொலைத்தொடர்பு பொறியாளராக பணியாற்றிவரும் நிலையில், தற்போது அந்த வேலைக்கு திரும்ப முடியாது என கூறுவது உண்மையில் தம்மால் ஜீரணிக்கவே முடியவில்லை என்றும், வேறு வேலை எதுவும் தமக்கு தெரியாது என்றும் பிராட்லி குறிப்பிட்டுள்ளார்.
தமது மனைவியுடன் 6 வார சுற்றுலாவை திட்டமிட்டு சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்ற நிலையிலேயே விமானம் குலுங்கி விபத்தில் சிக்கியது.
தற்போது பாங்காக்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் அவர் எப்போது லண்டன் திரும்புவார் என்று தெரியவில்லை என கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.